Friday, January 21, 2011

அரச்சலூரில் இன்று தடையைமீறி “கள்” இறக்கி விற்பனை

தமிழ்நாட்டில் கள் இறக்க அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு கள் இயக்கம் கள்இறக்க அனுமதி வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தடையை மீறி கள் இறக்கி விற்கும் போராட்டத்தை கள் இயக்கம் அறிவித்தது.
 
இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு முதல் விற்பனையைபெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அரச்சலூரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் திரண்டனர்.
 
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தென்னந் தோப்புகளில் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் காலை 9.30 மணிக்கு ஒரு தென்னை மரத்துக்கு பூஜை செய்து பின்னர்கள் இறக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
 
இதில் கள் இயக்க மாநில அமைப்பாளர் கதிரேசன், தென்னை மற்றும் பனைமரத் தொழிலாளர்கள் சங்க மாநில துணை தலைவர் முருகன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில் சில நிமிடம் கழித்துகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கள் இறக்கி சிலருக்கு விற்பனை செய்தார். இதை கண்ட போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
 
இந்த கள் இறக்க போராட்டத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து பேசினர். கள் இயக்க அனுமதி வழங்க வேண்டும், தடையை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
 
அரச்சலூரில் நடைபெறும் கள் இறக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் இன்று காலை 11.40 மணி அளவில் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வழியாக வந்தார்.
 
அவரை சமத்துவமக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் நாராயணன், மாநில பொதுச்செயலாளர் நாகராஜ், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், இளைஞர் அணி செயலாளர் கராத்தே சரவணன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆஸ்டின், பொதுக்குழு உறுப்பினர் இளையராஜாக, அந்தியூர் ஒன்றிய செயலாளர் குருநாதன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் தர்மராஜ், துணைச் செயலாளர் சீனிவாசன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
 
பின்னர் சரத்குமாரருக்கு சால்வை அணிவித்தனர். சரத்குமாரை ஏராளமான பொதுமக்கள் கூடிநின்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சரத்குமார் அரச்சலூர் புறப்பட்டு சென்றார்.
 
அரசு பால் வியாபாரம் செய்வதுபோல் கள்ளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்: சரத்குமார் பேட்டி
 
அரச்சலூரில் நடைபெறும் கள் இறக்கிவிற்கும் போராட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று கோவையில் இருந்து புறப்பட்டு வந்தார். அவருக்கு பெருந்துறை பஸ்நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் திரளாக நின்று வரவேற்பு கொடுத்தனர்.
 
அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வாழ்த்து கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதன்பிறகு சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
1967-ம் ஆண்டு அண்ணா முதல்- அமைச்சராக பதவி ஏற்றபோது பூரண மது விலக்குதான் எங்கள் கொள்கை. சாராயக் கடைகள் திறந்தால்தான் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றால் எனக்கு இந்த பதவி தேவை இல்லை. துண்டை தோளில் போட்டுக்கொண்டு சென்று விடுவேன் என்று அண்ணா சொன்னார்.
 
ஆனால் இன்று மதுக்கடைகளில் பலவகையான மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கள்ளில் குறைந்த அளவே ஆல்கஹால் உள்ளது. எனவே கள்ளை விற்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு பால் வியாபாரம் செய்வது போல கள்ளையும் கொள்முதல் செய்து டின்கள், கேன்களில் அடைத்து விற்க வேண்டும்.
 
சுமார் 10 லட்சம் தென்னை மற்றும் பனை ஏறும் தொழிலாளர்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள். எங்களது கட்சியின் கொள்கை பூரண மதுவிலக்குதான். இதை எங்கள் தேர்தல் அறிக்கையிலும் வலியுறுத்துவோம். மது கடைகளை மூடினால் கள்ளச்சாரய விற்பனை அதிகமாகி விடும் என்று கூறுகிறார்கள்.
 
இதை அரசோ... போலீசாரோ... தடுக்க முடியாதா? இவ்வாறு அவர் கூறினார்.