Tuesday, March 29, 2011

தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம்

தென்காசி : தென்காசியில் ராதிகா வீதி வீதியா சென்று இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டார். தென்காசி தொகுதியில் ச.ம.க.தலைவர் சரத்குமார் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அவரது மனைவி ராதிகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென்காசி மேலமாசி வீதி, நடு பெட்ரோல் பங்க், வாலிபன் பொத்தை, தைக்கா தெரு, போலீஸ் குடியிருப்பு, எல்.ஆர்.எஸ்.பாளையம், மங்கம்மா சாலை, களக்கோடி தெரு, ஹவுசிங் போர்டு காலனி, கூளக்கடை பஜார், அரிப்புக்கார தெரு, மரைக்காயர் பள்ளிவாசல் தெரு, புதுமனை தெருக்கள், கொடிமரம், சொர்ணபுரம் மேட்டு தெரு, பாறையடி தெரு, வாய்க்கால் பாலம், கீழப்புலியூர், வேம்படி பள்ளிவாசல் தெரு, செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெரு, மவுண்ட் ரோடு, மலையான் தெரு, ஆபாத் பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ராதிகா சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார்.

ஒவ்வொரு தெருவிலும் பொதுமக்கள் அதிகமாக கூடி நிற்கும் இடங்களில் ராதிகா பிரசார வேனில் இருந்து இறங்கி சென்று அவர்களுடன் கலந்துரையாடல் செய்தார். பொதுமக்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார். குறைகளை போக்க இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு சரத்குமாரை வெற்றி பெற செய்யும்படி ராதிகா பொதுமக்களை கேட்டுக் கொண்டார். பிரசாரத்தின் போது ராதிகா நிருபர்களிடம் கூறியதாவது: ""பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக கூறினர். அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றம் தான். அ.தி.மு.க.தேர்தல் அறிக்கை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், பெண்களுக்கு திருமண உதவித் தொகை, 4 கிராம் தங்கம், முதியோருக்கு பஸ் பாஸ், உதவித் தொகை அதிகளவில் மக்களை ஈர்த்துள்ளது. மின் வெட்டு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதற்கும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடுகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கெல்லாம் விடிவு காலம் ஆட்சி மாற்றம் என்பது மறுக்க முடியாது'' என்றார் ராதிகா.