Tuesday, April 5, 2011

கேள்விக்குறியாகும் "க' வன்னாவின் வெற்றி!


நடிகர் சரத்குமாரும், திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமிபாண்டியனும் தேர்தல் களத்தில் மோதிக்கொள்ளும் தொகுதி தென்காசி.திமுக தலைமையிலான கூட்டணியில் இப்போதையை தென்காசி எம்எல்ஏவும், அக் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலருமான வீ. கருப்பசாமிபாண்டியன் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும், நடிகருமான ஆர். சரத்குமார் போட்டியிடுகிறார்.

தென்காசி தொகுதி மிகுந்த தொழிற்சாலைகளோ, அதிக அளவில் விவசாயமோ இல்லாத பகுதி. இங்கு ஓரளவு பூக்கள், காய்கனிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் குற்றாலம் அமைந்துள்ளது இத்தொகுதியின் கூடுதல் சிறப்பு.இத் தொகுதியில் இப்போது, 1,06,025 ஆண்கள், 1,05,878 பெண்கள் என மொத்தம் 2,11,903 வாக்காளர்கள் உள்ளனர். 


இத்தொகுதியில் தென்காசி நகராட்சி, 5 பேரூராட்சிகள், 35 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.1957-ம் ஆண்டு முதல் இதுவரையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 6 முறையும், திமுக, அதிமுக தலா இரண்டு முறையும், தமாகா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். இதிலிருந்தே இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகம் என்பது தெரியவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தான் இங்கு போட்டியிடும் கட்சிகள் இதுவரை வெற்றிபெற்று வந்துள்ளன.இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் அதிமுக, திமுக, புதிய தமிழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு குறிப்பிட்ட அளவில் வாக்கு வங்கி உண்டு. தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தவரை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகள் என்று சொல்வதாக இருந்தால் தேவர்கள், நாயக்கர்கள், முஸ்லிம்கள், பள்ளர் என்று பரவலாக அழைக்கப்படும் தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகளைத்தான் குறிப்பிட வேண்டும். ஆனால், பிள்ளைமார் வாக்குகளும், பிராமணர்களின் வாக்குகளும்தான் வெற்றிக்காற்றைத் திசைதிருப்பும் சக்தி படைத்தவை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. 

கடந்த 2006 சட்டபேரவைத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் வீ. கருப்பசாமிபாண்டியன் 69,755 வாக்குகளும், மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இராம.உதயசூரியன் 51,097 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 5,190 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் காமராஜ் 5,081 வாக்குகளும் பெற்றனர்.ஆனால் 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெள்ளைப்பாண்டி 57,069 வாக்குகளும், இ.கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட பொ. லிங்கம் 47,410 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 15,644 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் க. கிருஷ்ணசாமி 13,582 வாக்குகளும் பெற்றனர்.அதிமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவைத் 

தேர்தலில் இடம்பெற்ற கட்சிகளில் மதிமுகவைத் தவிர பிறகட்சிகள் அனைத்தும் இப்போதும் அந்த அணியிலேயே நீடிக்கின்றன. இதுதவிர கூடுதலாக மனிதநேய மக்கள் கட்சியின் வாக்குகளும் இந்த அணிக்கு பலம் வாய்ந்ததாகும்.தமிழகத்தின் பிறபகுதிகளில் வாக்காளர்கள் தங்களுடைய வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கும், தென்காசி தொகுதியில் தேர்வு செய்வதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. குறிப்பாக இந்தத் தேர்தலில் ஜாதி மற்றும் மதம் தென்காசி தொகுதியைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கிய காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு கடந்த காலங்களில் தென்காசி பகுதியில் நடைபெற்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களே சாட்சி.

இப்போதைய நிலவரப்படி கூட்டணி கட்சிகளின் அடிப்படையிலும், ஜாதி ரீதியான வாக்கு அடிப்படையிலும், அதிமுக தலைமையிலான சமக கூட்டணி வேட்பாளர் ஆர். சரத்குமாரின் வெற்றிக்கு கூடுதல் பலம் அளிக்கும் காரணங்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவற்றில் இப்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து, துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டு வெகு குறைந்த காலத்திலேயே மாவட்டச் செயலர் பதவியை வீ.கருப்பசாமிபாண்டியன் பெற்றார். இதனால் இந்த மாவட்டம் முழுவதும் திமுகவில் பல்வேறு அணிகள் காணப்படுகின்றன. இவற்றில் பதவி கிடைக்காதவர்கள், திமுகவிலேயே மாற்று அணியைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமிபாண்டியனுக்கு முழுமனதுடன் பணியாற்றுகிறார்களா என்பதுகூடச் சந்தேகம்தான். 

ஸ்டாலின் ஆதரவாளரான கருப்பசாமிபாண்டியன் வெற்றி அடைவதை அழகிரியே விரும்பவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தென்காசிப் பக்கமே தலைகாட்டவில்லை என்றும் தெரிகிறது.தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை, புதிய தமிழகம் கட்சியும், தேமுதிகவும், மனிதநேய மக்கள் கட்சியும் கணிசமான வாக்கு வங்கியை உடைய கட்சிகள். அதிமுகவுக்கும் இந்தத் தொகுதியில் கணிசமான வாக்குகள் உண்டு. போதாக்குறைக்கு நாடார் சமுதாயத்தின் வாக்கும், பிரபல திரைப்பட நடிகர் என்பதால் இயற்கையாகவே அதிமுக கூட்டணி வேட்பாளரான சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கும் "க'வன்னா அண்ணாச்சி என்று பரவலாக அழைக்கப்படும் மாவட்ட திமுக செயலாளர் வீ. கருப்பசாமிபாண்டியனின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

SOURCE: click here  Dinamani

No comments:

Post a Comment