Friday, December 16, 2011

குற்றாலம் மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் தினவிழா கவர்னர் ரோசையா,அமைச்சர் செந்தூர்பாண்டியன், தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் பங்கேற்பு

தென்காசி. டிச. - 11 - தமிழக கவர்னர் ரோசையா தனது குடும்பத்துடன் நேற்று குற்றாலம் வருகை தந்தார். குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம் மவுனசாமி மடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கல்லூரி நிகழ்ச்சியில் தமிழக கதர்மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார், நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தமிழக கவர்னர் ரோசையா தனது மனைவியுடன் நேற்று காலை பொதிகை எக்ஸ்பிரஸ்  ரயில் மூலம் செங்கோட்டை வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அதன்பின் காலை 11 மணி அளவில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மனிதஉரிமை நாள் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் செந்தூர்பாண்டியன், எம்.எல்.ஏ. சரத்குமார் ஆகியோர் பேசினார்கள். அதனை தொடர்ந்து குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழக அமைச்சர் செந்தூர்பாண்டியன். இந்த விழாவில் தமிழக கதர்மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:- இன்று மனித உரிமைகள் தினம் குற்றாலம் மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பாகஆட்சி நடத்தி வருகிறார்கள். பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் கல்வி கற்று அனைத்து துறைகளிலிலும் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நீங்கள் நன்கு கல்வி கற்று வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் இவ்வாறு அவர் பேசினார்.
 தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் பேசியதாவது:-
இந்த கல்லூரியின் துவக்கம் முதல் இன்றுவரை
செயல்படும் விதம் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார்.  இன்று மனித உரிமைகள் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1945 ம் ஆண்டு உலக நாடுகள் ஒன்று கூடி மனித உரிமைகளுக்கா குரல் கொடுத்தனர். அதன்பின் 1950 ம் ஆண்டு முதல் டிசம்பர் 10 ம் நாள் மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 61 வது மனித உரிமைகள் தின விழாவினை நாம் இங்கு கொண்டாடி கொண்டு இருக்கிறோம். மனித உரிமைகள் காக்கப்பட வேண்டுமானால் முதலில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். நமது நாட்டில் 30 சதவீதம் பேர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள்.இந்த நிலை மாறவேண்டும். வறுமையை ஒழிக்கவும், ஜாதிமத வேறுபாடுகளை களையவும் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு சபதம் ஏற்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இலங்கையில் தமிழர்களின் மீது சிங்களவர்கள் உரிமை மீறல்கள் நடத்திய போது தமிழகத்தில் சட்டமன்ற கூட்டி மனித உரிமைக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். என்றும் தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் ராஜபக்சே மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி சரித்திர சாதனை படைத்தவர் நமது முதல்வர் ஆவார். எனவே மனித உரிமைகளை பாதுகாக்க முதலில் ஜாதிமதக் கொடுமைகளை ஓழிக்க வேண்டும், அடுத்து வறுமையை ஒழிக்கவும் நாம் அனைவரும் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.  தமிழக கவர்னர் ரோசையா
இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசையா பேசியதாவது:- தமிழகத்தில் எத்தனையோ கல்லூரிகள் உள்ளது. ஆனாலும் ஒரு மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் தினவிழா கொண்டுவது வரவேற்க தக்கது.  மனித உரிமைகள் தினம் கொண்டாடுவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் முன்வரவேண்டும். இன்றைய இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் நாளைய குடிமகன்கள். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவது உங்கள் கைகளில் தான் உள்ளது. பாரீஸ் நகரில் கடந்த 1948 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் நாள் ஐ.நா.சபை கூட்டத்தில் மனித உரிமைகள் தினம் கொண்டாடுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதநேயம், கவுரவம், சமதர்மம் உள்ளிட்ட பறிக்க முடியாத உரிமைகள் வழங்கப்படுவதுதான் மனித உரிமைகள் ஆகும். அடிப்படை சுதந்திரம், சம நீதி  ஆகியவை மட்டுமே உலக அமைதிக்கு  வழிவகுக்கும். இன்றைய சூழலில் உலகில் வன்முறை , மனித உரிமைக்கு எதிராக உள்ளது. இதனை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்று பட்டு மனித உரிமைகள் காக்க பாடுபட வேண்டும். தனித்தன்மை, அன்பு, மனிதாபிமானம், அனைவரிடமும் இருக்க வேண்டும். உலகில் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக திகழ்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படுகிறது. அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். மனித உரிமைகள் மீறப்பட்டால் முறைப்படி விசாரணை நடைபெறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவரையும் மதித்து சமமாக மரியாதை செலுத்தினால்தான் மனித வாழ்வு சக்தி வாய்ந்ததாக இருக்கும். அருள் எனும் சுடர் இருந்தால் அறியாமை எனும் இருள் நீங்கும் என சுவாமி விவேகானந்தா கூறியுள்ளார். நம்நாட்டில் வறுமையில் வாடுவோர் அதிக அளவில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடவேண்டும். தமிழகத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்கள் கல்வி கற்பது அதிகரித்துள்ளது. இதனால் அந்த குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் சிறப்பாக வாழமுடியும்  இவ்வாறு அவர் பேசினார். முடிவில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் செயலாளர் சுதர்சன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், குற்றாலம் பேரூராட்சி தலைவர் அ.லதா, மேலகரம் பேரூராட்சி தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், தென்காசி நகராட்சி தலைவர் எஸ்.பானு, அதிமுக பிரமுகர்கள் பி.பி.ஷமீம், பொய்கை மாரியப்பன், கிருஷ்ணமுரளி, செங்கோட்டை குருசாமி, ஈஸ்வரப்பாண்டியன், அசோக்பாண்டியன்,  அரசு வழக்கறிஞர்கள் மருதுபாண்டியன், சிவாஜிசெல்லையா, சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சுதர்சன், தங்கராஜ், செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  அதன்பின் கவர்னர் ரோசையா குற்றாலம் மவுனசாமி மடத்தில் நடைபெற்ற பட்டாபிஷேக நிகழ்ச்சி மற்றும் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். மாலை 4.30 மணிக்கு தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு கவர்னர் ரோசையா குடும்பத்துடன் சென்று சுவாமி கும்பிட்டார். அதன்பின் செங்கோட்டை ரயில் நிலையம் சென்று இரவு 7 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் ரோசையா வருகையை முன்னிட்டு செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, பகுதிகளில் நெல்லை எஸ்.பி. விஜயேந்திரபிதரி உத்தரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாதாந்திர கல்வி உதவித்தொகை: முதல்வருக்கு பாராட்டு


சென்னை, டிச.13: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு 1ம் வகுப்பு முதல் மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.
.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருப்பதை பாராட்டி வரவேற்கிறேன்.

சமூக நீதியை நிலை நாட்டுவதிலும், சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக முனைப்புடன் செயல்பட்டுவரும் முதலமைச்சர் அதன் தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக பல்வேறு உதவிகளை வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராஜர், தொடர்ந்து சத்துணவுத் திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலிய எம்ஜிஆர் ஆகியோர் வரிசையில், உயர்கல்விக்கும், கல்லூரிப் படிப்பிற்கும் மட்டுமே உதவித்தொகை என்றில்லாமல் 1ம் வகுப்பிலிருந்தே உதவித்தொகை வழங்கியிருப்பது சிறப்பிற்கு உரியது.

100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டுமானால், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கல்வியைத் தொடராமல் இடையில் நின்றுவிடுவது தடுக்கப்பட வேண்டும்.  முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பின் அடிப்படையில் மாணவர்கள் முழுமையாக பள்ளிப் படிப்பை நிறைவு பெற்று 100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் வருங்காலத்தில் திகழ்வது உறுதி என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பிற்கு நன்றியும், பாராட்டும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இலவசங்களும், மானியங்களும் கல்விக்கும், வேளாண்மைக்கும் கிடைப்பதை எங்கள் இயக்கத்தின் கொள்கையாகக் கொண்டுள்ளோம்.  இவ்வாறு அறிக்கையில்  அவர் கூறியுள்ளார்.