சென்னை, ஜூன் 9: தென்காசியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பேரவைக் குழுத் தலைவரும், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் கோரிக்கைவிடுத்தார்.
பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தீர்மானம் மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பங்கேற்று அவர் பேசியது: நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள்ளன. இதில் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 6 தாலுகாக்களைக் கொண்டு நெல்லை மாவட்டமும், தென்காசி உள்ளிட்ட 5 தாலுகாக்களைக் கொண்டு தென்காசி மாவட்டமும் உருவாக்கலாம். தென்காசி மருத்துவமனை 36 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களை நியமிப்பதோடு, மருத்துவக் கல்லூரியை அமைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். பழங்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கை அமைப்பதுடன், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தையும் கட்ட வேண்டும். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்தால்தான் தொழில் வளர்ச்சி இருக்கும். எனவே, காவல்துறையை நவீனமயமாக்க வேண்டும். இப்போது தமிழகத்தில் 632 பேருக்கு 1 போலீஸ்காரர் என்ற விகிதம் உள்ளது. போலீஸாரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மேலும் அவர்களுக்குப் பொருளாதாரச் சலுகைகளும் வழங்க வேண்டும்.
புதிய தலைமைச் செயலகம்: புதிய தலைமைச் செயலகம் மிகுந்த பொருள்செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையெல்லாம் முடிந்தபிறகு, அதை அருங்காட்சியகமாகவோ, கருத்தரங்கு கூடமாகவோ பயன்படுத்த வேண்டும். சமச்சீர் பாடத்திட்டத்தை சீரமைக்க குழு நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களின் இடையே இடைவெளியைக் குறைக்கும் வகையில் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
நூலகங்களை சீரமைத்து, காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள்தொகைப் பெருக்கத்தால் எதிர்காலத்தில் நமது நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம். இந்தியாவை உணவுக் களஞ்சியமாக மாற்றும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும். கச்சத் தீவை மீட்க ஆதரவு: இந்தியாவின் பாதுகாப்புக்காக கச்சத் தீவை மீட்பது அவசியம் ஆகும். எனவே, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறோம்.
