Monday, May 30, 2011

தென்காசி தொகுதியில் அடிப்படை வசதிகள்நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்படும்

தென்காசி:தென்காசி தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுப்பேன் என எம்.எல்.ஏ.சரத்குமார் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:""தென்காசி தொகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் நடந்துள்ளது, தொய்வான பணிகள் எவை என்பது குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அது கிடைக்கப்பெற்ற பிறகு உரியை நடவடிக்கை மேற்கொள்வேன். ஆலங்குளம் யூனியன் பகுதியில் நன்றி தெரிவித்து வருகிறேன். தென்காசி தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஒரு மாதம் ஆகலாம். வரும் ஜூன் 3ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் துவங்குகிறது. கூட்ட தொடர் முடிந்த பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை தொடர்வேன்.

தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் நாளை (1ம் தேதி) முதல் துவங்கப்படுகிறது. சுரண்டை, பாவூர்சத்திரம், ஊத்துமலை பகுதியில் எம்.எல்.ஏ.அலுவலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தென்காசி பகுதியில் அத்யாவசிய தேவை சர்வீஸ் ரோடு. இதனை உடனே அமைக்க கூறியுள்ளேன். ரிங் ரோடு, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற உரிய ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. குற்றாலம் கோடை கால குடிநீர் தேக்கம் குடியிருப்பில் உள்ளது. இந்த நீர் தேக்கம் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை. தொகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர் வாரி மராமத்து பணி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.தென்காசியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் பழைய அரசு ஆஸ்பத்திரியில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன். சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்கப்படும். சுரண்டை செண்பக கால்வாய் சீரமைக்கப்படும். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் வசதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காலதாமதம் ஆகிறது. இதனால் இதனை அமைக்க நன்கொடையாளர் மூலம் முயற்சி மேற்கொள்கிறேன். தனியார் மூலமாக ஹை லெவல் சி.டி.ஸ்கேன் வைத்து சிறிய அளவிலான பரிசோதனைக்கு இலவசமாகவும், பெரிய அளவிலான சோதனைக்கு எம்.எல்.ஏ.பரிந்துரை கடிதத்துடன் சென்றால் 50 சதவீத மானியத்திலும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுரண்டை சிவகுருநாதபுரத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படும். தொகுதி பற்றி முழுமையாக அறிய 3 மாத கால அவகாசம் தேவை. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, சுகாதார வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்படும். தென்காசி பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிற்றாறு தூய்மை படுத்தப்படும். தமிழகத்தில் தென்காசி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன்'' என்றார் எம்.எல்.ஏ.சரத்குமார்.
சுரண்டை பகுதியில்சரத்குமார் நன்றி தெரிவிப்பு
சுரண்டை:சுரண்டை பகுதியில் தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.தென்காசி தொகுதி எம்எல்ஏ சரத்குமார் சுரண்டை பகுதியில் உள்ள பரங்குன்றாபுரம், மருதுபுரம், வாடியூர், மரியதாய்புரம், கரையாளனூர், குறிச்சான்பட்டி, குருந்தன்மொழி, மேலக்கலங்கல், கீழக்கலங்கல் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.பின்னர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு இவற்றுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் பேசும்போது: - ""இப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளை அதிகாரிகளுடன் கலந்துபேசி அதற்கான தீர்வு காண்பேன். தென்காசி தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்'' என்றார்.நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சுரண்டை எஸ்.வி.கணேசன், பாவூர்சத்திரம் காளிதாசன், மாவட்ட சமக செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் பாண்டியாபுரம் கண்ணன், துரை, சேர்ந்தமரம் ராயப்பன், கீழப்பாவூர் ஒன்றிய சமக துணை செயலாளர் ஆர்.வி.ராமர், சிவன், ஆலங்குளம் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் வாடியூர் அந்தோணிசாமி, தங்கம், பிரபாகரன், வின்சென்ட் நாடார், மாடசாமி, அருள், பரமசிவன், பூண்டிராஜ், திரிகூடபதி சேகர், சுரண்டை பாலன், அரவிந்த் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

தென்காசி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த சரத்குமார்

தென்காசி தொகுதியை ஒரு மாதத்திற்குள் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த தொகுதி எம்எல்ஏ சரத்குமார் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
அதில் தென்காசி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தென்காசி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பேசிய சரத்குமார், தென்காசி தொகுதியை மேம்படுத்திட ஒரு மாதத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நடைபெறும்.
தொழில்துறையில் பின்தங்கியுள்ள தென்காசியில், வேலை வாய்ப்புகளை பெருக்கிடவும், அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதிகள் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்