Sunday, June 5, 2011

சரத்குமார் எம்.எல்.ஏ. இரங்கல்:

தென்காசி,ஜூன் 5
தென்காசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது கார் மோதியதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இருவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்தனர்.  

தென்காசி பாறையடி தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் மகன் சுந்தர் (19), மாடசாமி மகன் ராஜாமணி (26), பிச்சையா மகன் செந்தில்குமார் (25), மூக்கையா மகன் கதிரேசன் (27), ராமகிருஷ்ணன் மகன் கார்த்திக் (25), சுப்பிரமணி மகன் சண்முகதாஸ் (27), மற்றொரு பிச்சையா மகன் இசக்கிதாஸ் (23), சுப்பையா மகன் ஐயப்பன்(22). இவர்களில் கார்த்திக் ஆட்டோ வைத்துள்ளார். மற்றவர்கள் கட்டடத் தொழிலாளர்கள். ஞாயிற்றுக்கிழமை மாலையில் அனைவரும் கார்த்திக்கின் ஆட்டோவில் பழையகுற்றாலம் அருவிக்கு சென்று குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.  

அப்போது, கடையநல்லூரிலிருந்து விக்கிரமசிங்கபுரம் சென்ற கார் தென்காசி-அம்பாசமுத்திரம் சாலையில் வழிமறிச்சான் பகுதியில் வந்து கொண்டிருந்தது.  எதிரே கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.  எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது கார் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுந்தர், ராஜாமணி, செந்தில்குமார், கதிரேசன், கார்த்திக், சண்முகதாஸ் ஆகியோர் இறந்தனர்.  பலத்த காயமடைந்த இசக்கிதாஸ், ஐயப்பன் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இவர்களில் ஐயப்பன் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  விபத்தில் பலியான செந்தில்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்காசி நகர துணைச் செயலராகவும், கார்த்திக் அக்கட்சியின் நகரப் பொருளாளராகவும் இருந்து வந்தனர்.  குற்றாலம் போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதரி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.  
சரத்குமார் எம்.எல்.ஏ. இரங்கல்: விபத்தில் 6 பேர் இறந்ததற்கு ஆர்.சரத்குமார் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முதல்வருக்கு மனு

நாகர்கோவில், ஜூன் 5:  
ஆரல்வாய்மொழி பொய்கை அணையில் மணல் எடுக்கப்படுவதால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. தியோடர் சேம் அனுப்பியுள்ள மனு:  

ஆரல்வாய்மொழியிலுள்ள பொய்கை அணைப்பகுதியிலிருந்து சுனாமி குடியிருப்புகள் கட்டுவதற்கு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. பல லட்சம் மதிப்புள்ள இந்த மணல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் நூற்றுக்கணக்கான லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.  கன்னியாகுமரி முதல் தூத்தூர் வரையிலான சுனாமி குடியிருப்புகளுக்காக ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இக் குடியிருப்புகளைக் கட்டும் பணி 12 அரசு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டுவதற்கான மணல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து எடுத்துவர ஒப்பந்தப்புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை முடிக்க இன்னும் 15 மாதகாலம் அவகாசமும் உள்ளது.  இந்நிலையில், அரசு அதிகாரிகள் அனுமதியுடன் பொய்கை அணைப்பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் தோவாளை கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மணல் தட்டுப்பாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக அணைக்குள்ளிலிருந்து மணல் அள்ள அனுமதி அளித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதைத் தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.