Friday, March 18, 2011

என்னைத் தூற்றினால், நடப்பதே வேறு: சமக தலைவர் சரத்குமார் ஆவேசம்

நெல்லை: என்னைப்பற்றி தூற்றினால் நடப்பதே வேறு என்று சமத்துவ மக்கள் கட்சி த் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.



அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமக தலைவர் சரத்குமாருக்கு பாராட்டு விழா நேற்று பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. அதற்கு அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சபாபதி நாடார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது,

சமத்துவ மக்கள் கட்சியின் மூலம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க நான் பாடுபட்டு வருகிறேன். நான் அனைவரையும் அரவணைத்து செல்பவன். அதற்காக என்னை பலவீனமானவன் என எண்ணி விட வேண்டாம். நான் துரோகம் செய்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நான் யார் சொத்தையும் எடுத்துச் செல்லவில்லை.

என்னிடம் இருக்கும் பணம் நான் சினிமாவில் உழைத்து சம்பாதித்தது. திரைமறைவில் இருந்து நான் ஒருக்காலும் போராட மாட்டேன். பின்னால் இருந்து யார் முதுகிலும் குத்த மாட்டேன். மெர்க்கன்டைல் வங்கியை மீட்க சமுதாயத்தில் இருந்து அழைத்தபோது நான் மறு பேச்சு பேசாமல் சென்றேன். மும்பையில் காமராஜர் பெயரில் கட்டிடம் கட்ட என்னை அணுகியபோது ரூ.5 லட்சம் வழங்கினேன்.

ஆனால் என்னை அழைக்காமலேயே அக்கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்திவிட்டனர். நல்லவர்களை தூற்றாதீர்கள். சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு அறுகதை இல்லை. என்னை சீண்டி பார்த்தால் சொந்த பந்தங்களை கூட நான் பகைத்து கொள்ள தயங்க மாட்டேன். நடப்பதே வேறு. சரத்குமார் நின்றாலும் தோற்கடிப்போம் என சிலர் கூறுகிறார்கள். தோற்பதால் மட்டும் எனது வேகம் குறைந்து விடாது.

எந்த காலத்திலும் எனது மக்கள் பணி தொடரும். பெருந்தலைவர் மக்கள் கட்சி என அவர்கள் துவங்க நினைக்கும்போது சமக பெயரில் போட்டியிடுவேன் என என் கருத்தை தெரிவித்தேன். முதல் நாள் கட்சி துவங்கி விட்டு மறுநாள் என்னை நீக்கி விட்டார்கள். சமகவை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது. சமகவை அழிக்க நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது என்றார்.

8 கோடி மக்களைத்தான் நம்பியுள்ளோம்-சரத் குமார்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற சிந்தித்து வருகிறோம். அதற்காக தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களைத்தான் நம்பியுள்ளோம் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி யின் முப்பெரும் விழாவில் அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, கட்சியின் 4-வது ஆண்டு துவக்க விழா, சரத்குமார் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவி்ல் நலத்திட்ட உதவிகளை வழங்கி சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் சரத்குமார் பேசியதாவது,

தூத்துக்குடி உப்பளம் நிறைந்த ஊர். உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை என்று சொல்வார்கள். அது போல நான் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சி வெற்றிப் பாதையை நோக்கிச் செல்கிறது. காமராஜர் தான் படிக்காவி்ட்டாலும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். சீரிய கல்விச் சேவையை செய்தவர்.

காமராஜரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டதுதான் சமத்துவ மக்கள் கட்சி. 31.08.2007ல் இந்த கட்சியை துவங்கியபோது பலர் ஏளனம் செய்தனர். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் சமக. துவக்கத்தில் பல கொள்கைகளை அறிவித்த கட்சிகள் இன்று கொள்கைகளே இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், பெற்ற வாக்குகள் அதிகம். மக்கள் எங்களை உற்று நோக்கி வருகின்றனர். எங்களது கொள்கைகள், தீர்மானங்கள் எல்லாம்தான் தமிழகத்தில் சட்டமாகி வரும் நிலை உள்ளது. வெற்றி என்பது மெதுவாகத்தான் கிடைக்கும்.

காமராஜர் அமைத்து தந்த அஸ்திவாரத்தில் இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. அவரது பண்புகளை பின்பற்றி நடக்கிறது. தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கின்ற நேரம் இது. 8 கோடி மக்களை மட்டுமே நாங்கள் நம்பியுள்ளோம்.

தமிழகத்தை வறுமை இல்லாத மாநிலமாக மாற்ற சிந்தித்து வருகிறோம். எங்கள் கட்சியால் தமிழகத்தில் நல்ல ஆட்சி உருவாக்கப்பட்டது என்ற நிலை வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

16ல் சரத்குமாருக்கு பாராட்டு விழா: நாடார் சங்கங்கள் பேரவை

நெல்லை: வரும் 16-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமாருக்கு பாளை நூற்றாண்டு மண்டபத்தில் பாராட்டு விழா நடத்துவது என்று நாடார் பேரவை முடிவு செய்துள்ளது.


நெல்லை ஜங்ஷனில் அனைத்து நாடார் சங்கங்களின் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சபாபதி நாடார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மகளிரணி செயலாளர் சுபலதா, கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ், செல்வராஜ், வைத்தியலிங்கம், சவுந்திரபாண்டியன் உள்பட பலர் பேசினர்.

அதிமுக கூட்டணியில் நாடார் சமுதாயத்திற்கு 2 இடங்கள் ஒதுக்கிய ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது, வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தென்மாவட்ட தொகுதியில் போட்டியிட வேண்டும், பாளை நூற்றாண்டு மண்டபத்தில் வரும் 16-ம் தேதி சரத்குமாருக்கு பாராட்டு விழா நடத்துவதும், அதில் நாடார் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொள்வதும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன