Monday, January 9, 2012

பென்னிகுயிக் நினைவாக மணிமண்டபம்: தமிழக முதல்வருக்கு சரத்குமார் பாராட்டு

இந்தியாவின் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த செலவில் கட்டி முடித்த இங்கிலாந்து நாட்டு பொறியாளர் பென்னிகுயிக் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் நடிகர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயர் பென்னிகுயிக்கு லோயர் கேம்பில் ரூ.1 கோடி செலவில் சிலையும் மணிமண்டபமும் அமைக்க இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை கடந்த 1887-ல் கட்டத் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்டது. கட்டத் தொடங்கிய பின்பு நிதி பற்றாக்குறையால் அணை பாதியிலேயே நின்று விட்டதையறிந்த பென்னி குயிக் மிகவும் வருந்தி இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்றார்.
பின்பு அதன் மூலம் கிடைத்த பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி அணையின் நீர் பாசனத்தை தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு திருப்பி விட்டார்.
இதனால் தமிழகத்தின் விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைத்த ஆங்கிலேயர் பென்னிகுயிக் அவர்களுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முல்லை பெரியாறு அணைப்பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமான நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக மணிமண்டபம் அமைப்பது நமது தேசத்தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் தான் என்ற மரபில் இருந்தது. ஆனால் தமிழக மக்களின் விவசாயத்திற்கு தண்ணீரும், குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்த கர்னல் பென்னிகுக் என்ற தனி மனிதனுக்கு நன்றி கடனாக இன்று சிலையையும், மணிமண்டபமும் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதில் தமிழகமே பெருமையடைகிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் அதிமுக அரசு தொடர வேண்டும்: சரத்குமார்

மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் அதிமுக அரசு தொடர வேண்டும் என்று இந்திய மாநிலமான தமிழகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக சட்டசபை உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாவூர் சத்திரம் அருகேயுள்ள குறும்பாலப்பேரியில் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானசுந்தரம் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பேசியதாவது, கடந்த காலங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாடெங்கும் 6 ஆயிரம் கல்வி நிலையங்களை திறந்த காமராஜரும், கல்வி நிலையங்களில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்பட்டனர்.
அந்த வழியில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்போது மடிக்கணிணி வழங்கியுள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறார். அவரின் ஆட்சி தொடர வேண்டும். தமிழர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை மேம்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கேராளவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்றிட வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக அரசுக்கு அனைவரும் அனைத்து ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
மேலும் வரும் காலங்களில் குறும்பலாப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தற்போது இயங்கி வரும் வாடகை கட்டிடத்தை மாற்றி சொந்த கட்டிடம் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் செயற்படுத்தி தருவேன்.
மேலும் கீழப்பாவூர், ஆலங்குளம் ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படும் விதத்தில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்தி செயற்படுத்திட நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் 50 பேருக்கு ரூ.1500 வீதம் கல்வி உதவித் தொகையை சரத்குமார் வழங்கினார். பின்னர் கீழப்பாவூர் யூனியன் நிதியிலிருந்து அமைக்கப்படும் ரூ.8 லட்சம் செலவிலான சிமென்ட் ரோடு பணியை பார்வையிட்டார்.
தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து குறும்பலாப்பேரியில் உள்ள ஓடையை சிமென்ட் வாறுகாலாக மாற்றி அமைக்கப்படும் ரூ.10 லட்சத்திற்கான திட்டத்தை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அரியப்புரம், அய்யனூர் பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

வாகன ஓட்டிகளுக்கு வேகமல்ல, நிதானம் தான் முக்கியம்: சரத் குமார் பேச்சு

தென்காசி: கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 80 சதவீதம் இரு சக்கர வாகனங்களால் தான் நடந்துள்ளது என்று தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு வாரவிழா தென்காசி ஜெகநாத் அரங்கில் நடந்தது. இந்த விழாவுக்கு நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் பானு ஷமீம், துணை தலைவர் சுடலை, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட கிருஷ்ணன், செண்பகவல்லி, ரெட் கிராஸ் சுப்பிரமணியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

விழாவில் சரத்குமார் பேசியதாவது,

தமிழகத்தில் அதிகமான வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இது போன்ற சாலை பாதுகாப்பு வார விழாக்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு 64, 986 வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 2,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 80 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்களால் அதிக விபத்துகள் நடக்கிறது.

அதிக வேகத்தால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு வேகம் முக்கியமல்ல, நிதானம்தான் முக்கியம். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.