Monday, January 9, 2012

மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் அதிமுக அரசு தொடர வேண்டும்: சரத்குமார்

மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் அதிமுக அரசு தொடர வேண்டும் என்று இந்திய மாநிலமான தமிழகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக சட்டசபை உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாவூர் சத்திரம் அருகேயுள்ள குறும்பாலப்பேரியில் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானசுந்தரம் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பேசியதாவது, கடந்த காலங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாடெங்கும் 6 ஆயிரம் கல்வி நிலையங்களை திறந்த காமராஜரும், கல்வி நிலையங்களில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்பட்டனர்.
அந்த வழியில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்போது மடிக்கணிணி வழங்கியுள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறார். அவரின் ஆட்சி தொடர வேண்டும். தமிழர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை மேம்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கேராளவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்றிட வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக அரசுக்கு அனைவரும் அனைத்து ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
மேலும் வரும் காலங்களில் குறும்பலாப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தற்போது இயங்கி வரும் வாடகை கட்டிடத்தை மாற்றி சொந்த கட்டிடம் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் செயற்படுத்தி தருவேன்.
மேலும் கீழப்பாவூர், ஆலங்குளம் ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படும் விதத்தில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்தி செயற்படுத்திட நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் 50 பேருக்கு ரூ.1500 வீதம் கல்வி உதவித் தொகையை சரத்குமார் வழங்கினார். பின்னர் கீழப்பாவூர் யூனியன் நிதியிலிருந்து அமைக்கப்படும் ரூ.8 லட்சம் செலவிலான சிமென்ட் ரோடு பணியை பார்வையிட்டார்.
தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து குறும்பலாப்பேரியில் உள்ள ஓடையை சிமென்ட் வாறுகாலாக மாற்றி அமைக்கப்படும் ரூ.10 லட்சத்திற்கான திட்டத்தை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அரியப்புரம், அய்யனூர் பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment