Monday, January 31, 2011

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நடிகர் சரத்குமார் பேட்டி

கடலூர், ஜன.29-

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இந்த சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் நாகையில் இருந்து கட்சியின் நிர்வாகிகளுடன் காரில் சிதம்பரம் வழியாக சென்னைக்கு புறப்பட்டு வந்தார். கடலூர் முதுநகர், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் சரத்குமாருக்கு கடலூர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் சரத்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

பதில்:- இந்திய கடல் எல்லையில் மிதவை மற்றும் ரோந்து கப்பல்களை மத்திய அரசு கூடுதலாக விட வேண்டும். கட்சத் தீவை மீட்டு, மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விட வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.

கேள்வி:- தேர்தல் கூட்டணி பற்றி..?

பதில்:- கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.வரவேற்பு நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பிச்சு மணி, வடலூர் நகர செயலாளர் வீரசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், தெய்வகுமார், சிங்காரம், இளைஞர் அணி ரகுநாதன், சந்திரசேகர், வடலூர் நகர செயலாளர் வீரசேகரன், தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில செயலாளர் கஜேந் திரன், மாவட்ட தலைவர் சுப்புராயன், இளைஞர் பேரவை தலைவர் கோகிலன், இணை செயலாளர் ராமு, பொருளாளர் கந்தாசமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 1

சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து 10 நாளில் அறிவிப்பேன்; நெல்லையில் சரத்குமார் பேட்டி

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சரத்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி கபில்சிபில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய மந்திரி கருத்து சொல்வது தவறு. அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒதுக்கீடும் ஊழல்தான். இது தொடர்பாக மக்களிடம் நாங்கள் விளக்கிச்சொல்வோம்.
கே:- தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?
ப:-விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயரும் போதெல்லாம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மறைமுகமாக மத்திய அரசுக்கு துணை போகிறது. மக்கள் பிரச்சினைக்காக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வருகிற பிப்ரவரி 15-ந்தேதி தொடர் போராட்டம் நடத்தப்படும்.
கே:- சட்டசபை தேர்தலுக்கு ச.ம.க. தயாராகிவிட்டதா?
ப:-தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். எங்களை பொறுத்தவரை பதவி முக்கியமல்ல. நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து முதல் - அமைச்சர் ஆக்க வேண்டும்.
கே:- ச.ம.க.தேர்தல் கூட்டணி அமைக்குமா?
ப:-கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.
கே.எந்த கட்சியுடன் கூட்டணி?
ப:- தி.மு.க.வை எதிர்க்கிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
கே:- சட்டசபை தேர்தலில் 3-வது அணி அமையுமா?
ப:- அமைய வாய்ப்பில்லை.
கே:- அப்படியென்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று எடுத்துக்கொள்ளலாமா?
ப:-இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எது வானாலும் 10 நாட்களில் அறிவிப்பேன்.
கே:- கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ப:- விரைவில் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும். தென்காசியில் வருகிற பிப்ரவரி 6-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெறும். அதற்குள் கூட்டணி முடிவாகி விட்டால் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
கே:- தேர்தலில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?
ப:- இருக்கலாம். ஆலங்குளம், ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம் போன்ற பல்வேறு தொகுதிகளில் நான் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ச.ம.க. துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், நெல்லை மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தடுப்பூசிக்கு குழந்தை பலி: சரத்குமார் அறிக்கை

சென்னை, ஜன. 24-

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேற்று தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் சிறு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்தது. அப்படி மருந்து அளித்த 2 மணி நேரத்திற்குள் காஞ்சி மாவட்டம் படப்பையில் 2 வயது குழந்தை திடீரென உயிர்நீத்த பரிதாபம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் 4 குழந்தைகள் தடுப்பு ஊசி போட்ட உடன் இறந்திருக்கிறார்கள். பொது மக்கள் இதுபோன்ற நிகழ்வுகளால் அச்சமும் ஐயமும் கொள்வதை தவிர்க்க முடியாது. ஏற்கனவே போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டபாடில்லை. அரசு மீண்டும் மெத்தனமாக இருந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நோய் தடுப்பு மருந்தே உயிர்க்கொல்லியாக மாறுவதை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழப்பதோடு, அரசு வழங்கும் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ள அச்சப்பட்டு தயங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். எனவே அரசு மருத்துவ சேவைகளின் மூலம் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்