Monday, January 31, 2011

சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து 10 நாளில் அறிவிப்பேன்; நெல்லையில் சரத்குமார் பேட்டி

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சரத்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி கபில்சிபில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய மந்திரி கருத்து சொல்வது தவறு. அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒதுக்கீடும் ஊழல்தான். இது தொடர்பாக மக்களிடம் நாங்கள் விளக்கிச்சொல்வோம்.
கே:- தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?
ப:-விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயரும் போதெல்லாம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மறைமுகமாக மத்திய அரசுக்கு துணை போகிறது. மக்கள் பிரச்சினைக்காக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வருகிற பிப்ரவரி 15-ந்தேதி தொடர் போராட்டம் நடத்தப்படும்.
கே:- சட்டசபை தேர்தலுக்கு ச.ம.க. தயாராகிவிட்டதா?
ப:-தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். எங்களை பொறுத்தவரை பதவி முக்கியமல்ல. நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து முதல் - அமைச்சர் ஆக்க வேண்டும்.
கே:- ச.ம.க.தேர்தல் கூட்டணி அமைக்குமா?
ப:-கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.
கே.எந்த கட்சியுடன் கூட்டணி?
ப:- தி.மு.க.வை எதிர்க்கிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
கே:- சட்டசபை தேர்தலில் 3-வது அணி அமையுமா?
ப:- அமைய வாய்ப்பில்லை.
கே:- அப்படியென்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று எடுத்துக்கொள்ளலாமா?
ப:-இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எது வானாலும் 10 நாட்களில் அறிவிப்பேன்.
கே:- கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ப:- விரைவில் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும். தென்காசியில் வருகிற பிப்ரவரி 6-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெறும். அதற்குள் கூட்டணி முடிவாகி விட்டால் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
கே:- தேர்தலில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?
ப:- இருக்கலாம். ஆலங்குளம், ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம் போன்ற பல்வேறு தொகுதிகளில் நான் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ச.ம.க. துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், நெல்லை மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment