Friday, March 25, 2011

தென்காசி தொகுதியை மாற்றிக் காட்டுவார் சரத்குமார்-ராதிகா பிரசாரம்

தென்காசி: தென்காசி தொகுதியை மாற்றிக் காட்டுவார் சரத்குமார் என்று கூறி அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா பிரசாரம் செய்தார்.


தென்காசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சமக நிறுவனரும், நடிகருமான சரத்குமார் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் போட்டியிடுகிறார்.

திமுக-அதிமுக அணிகளுக்குள் நீயா, நானா என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் அதிமுக கூட்டணியினரும், திமுக கூட்டணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் குதித்துள்ளனர்.

கடந்த 23ம் தேதி மாலை முதல் சரத்குமார் தென்காசி தொகுதியில் அதிரடியாக களத்தில் குதித்து பஜார் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியன் இன்னும் வாக்கு சேகரிப்பை தொடங்கவில்லை. ஆனால் அவருக்கு பதில் அவரது மகன் சங்கர் தேவர் வாக்குகள் அதிமுகள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் மனைவி ராதிகா கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் குத்துக்கல்வலசை, அய்யாபுரம், வேதம்புதூர், இலஞ்சி, மேலகரம், ஆயிரப்பேரி, மந்தளம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் வாக்காளர்களிடம் பேசும்போது, தென்காசி தொகுதியை முழுமையான தொகுதியாகவும் தமிழகத்தின் முதன்மை தொகுதியாகவும், தனது கணவர் மாற்றி காட்டுவார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவார். தென்காசி மக்களுடன் தங்கி இருக்கும் வண்ணம் வாடகைக்கு வீடு பார்த்து வருவதாகவும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை சலுகை திட்டங்களையும் அவர் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வெற்றிவாய்ப்பு பிரகாசம் - சரத்குமார் பேட்டி


தென்காசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் சமக தலைவர் சரத்குமார் கூறியதாவது: தென்காசி தொகுதிக்கு தேவையானதை அறிந்து  செய்யப்படும். உழைப்புக்கு என்றுமே வெற்றி கிடைக்கும். தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது என்றார்.
பின்னர் மேலரதவீதியில் தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசும்போது, ''ஜெயலலிதா விடுத்துள்ள தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான பொருட்கள் எவை என்பதை அறிந்து தெரிவித்துள்ளார். நான் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வரவேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர்  கரு.நாகராஜன், துணை பொதுச்செயலாளர் ஆர்கே காளிதாஸ், மாவட்ட செயலாளர் தங்கராஜ்உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.