Monday, February 7, 2011

தேர்தல் கூட்டணி பற்றி திருச்சி மாநாட்டில் அறிவிப்பேன்: தென்காசி ச.ம.க. கூட்டத்தில் சரத்குமார் பேச்சு


தென்காசி,பிப்.7-

தென்காசியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டம் மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன் தலைமையில் நடந்தது. நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ச.ம.க. நிறுவன தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் இயக்கம்தான் ச.ம.க. கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக்களுக்காக பாடுபட்டு வரும் இயக்கமாகவும் செயல்பட்டு வருகிறது. கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி காட்டிய முதல்வர் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவினாசி கால்வாய் திட்டத்தினை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?. அந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் துன்பபட்டு கொண்டிருக்கிறார்கள் என தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கம் ச.ம.க.தான்.

இலங்கை கடற்படையினரால் அதிகளவில் மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் கடலோர பகுதிகளில் ரோந்து கப்பலை அதிகரிக்க வேண்டுமென, ச.ம.க. சொன்ன கருத்தை தான் சமீபத்தில் நடந்த உள்துறை மாநாட்டில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழகம் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் தேர்தல் நேரத்தில் 100சதவீத வாக்குகளை நிச்சயமாக பதிவு செய்யவேண்டும். காசை வாங்கி கொண்டு ஓட்டுப்போடாதீர்கள். காசு வாங்கி போட்டால் ஜனநாயகத்தில் ஓட்டை விழுந்து விடும்.

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். முதல்வர் கருணாநிதி ஏழைகள் இருக்கும் வரை இலவச கலர் டி.வி. கொடுக்கப்படும் என்று கூறுகிறார். கடந்த 1954 முதல் 1964 வரை காமராஜர் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தான் இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆற்று மணலை அதிகமாக திருடினால் நீர்வளம் பாதிக்கும் என கூறியதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஆற்று மணலை கொள்ளையடித்து விட்டனர். அதே போன்று இந்திய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் மூலம் இழப்பீடு செய்து விட்டனர். கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாமல் கெஞ்சி பார்க்கும் நிலையில்தான் பா.ம.க. உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் நடைபெறவுள்ள திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும். அன்றைய தினம் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் செல்வராஜ், துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொது செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், துணை பொது செயலாளர்கள் பன்னீர்செல்வம், மணிமாறன், சண்முகசுந்தரம், வர்த்தக அணி செயலாளர் ரத்தினம், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் லாரன்ஸ், மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.