Sunday, March 27, 2011

மக்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றிவாகை சூடும் - சரத்குமார்!

மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் அதிமுக வெற்றிவாகை சூடும் என்று சமக தலைவர் சரத்குமார் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தென்காசியில் அளித்த பேட்டி:
தென்காசி தொகுதியை முன்னுதாரணமான தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். சொந்த தொகுதி என்பதெல்லாம் மாயைதான். மக்கள் பிரச்னைகளைத் தொகுதிக்கு வந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் இல்லை. விஞ்ஞான உலகில் போன், வீடியோ, இ.மெயில் என பல வகைகளிலும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ளலாம். என்னை வெற்றிபெற செய்தால் இதுபோன்று பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவேன். அதன்மூலம் என்னை மக்கள் தொடர்புகொள்ளலாம்.
பீட்டர் அல்போன்சுக்குச் சென்னைதான் தற்போது சொந்த ஊர். அவர் இங்கு வந்து போட்டியிடவில்லையா? ஏன் முதல்வரும், துணை முதல்வருமே மாற்றுத் தொகுதியில்தான் உள்ளனர். தொலைத் தொடர்பு வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வசதி உள்ளது. நேரில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.
இந்தத் தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. அதனைத் தீர்த்து வைக்க பாடுபடுவேன். காங்கிரசாரும், பாமவினரும் என்னை விமர்ச்சிக்கின்றனர். 96ம் ஆண்டு தேர்தலில் பீட்டர்அல்போன்ஸ் என்னைப் பிரசாரத்திற்கு அழைத்துச் செல்வதற்காக காத்துக் கிடந்தார். ஆனால் இன்று என்னைத் தாக்கி பேசுகிறார்.
பாமக தலைவர் ராமதாஸ் நடிகர்களே பிடிக்காது என்கிறார். பின்னர் எதற்கு தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நடிகர்களைப் பத்திரிகை வைத்து அழைக்கிறார். மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றித்தான் பேச வேண்டும். விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு நன்றாக இல்லை. விரைவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இங்குப் பிரசாரத்திற்கு வருகை தர உள்ளனர். வடிவேலு விஜயகாந்தை மேடையில் தரமற்ற முறையில் விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை முற்போக்கு திட்டங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. மக்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றிவாகை சூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சரத்குமார் தொகுதிக்கு ஓகே... ஜெ!

சென்னை: விஜயகாந்த் தொகுதியில் பிரச்சாரம் செய்ய முதலில் ஒப்புக் கொண்ட ஜெயலலிதா, இன்று அந்தத் திட்டத்தை மாற்றிக் கொண்டார். சரத்குமார் போட்டியிடும் தொகுதியில் மட்டும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டம் இப்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்டி 30ஆம் தேதி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, செய்யார் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

30ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்லும் ஜெயலலிதா, அம்மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக முதலில் கூறப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜயகாநத் தொகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார். இதேபோல் தமிழகம் முழுவதும் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளுக்கு அருகாமையில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் ஒதுக்கிவிட்டுச் செல்கிறார்.

ஆனால் விஜயகாந்த், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பெரும்பாலான அதிமுக தொகுதிகளில் அவர் நீண்ட நேரம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதே நேரம் ஏப்ரல் 3ஆம் தேதி தென்காசி, சிவகாசி, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். அதில், தென்காசி தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமாருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கருப்புசாமி பாண்டியனை தோற்கடிக்க வேண்டும் என்பதாலும், கொடுத்த தொகுதிகளை மறுக்காமல் சரத்குமார் பெற்றுக்கொண்டதாலும், அவருக்கு இந்த அபார ஆதரவை ஜெயலலிதா காட்டுவதாகக் கூறப்படுகிறது.

பெரும் இழுபறிக்கு பின்னர் அதிமுக - தேமுதிக தொகுதி உடன்பாடு முடிந்ததாலும், அதிமுக போட்டியிட விரும்பிய தொகுதிகளை தேமுதிக வலியுறுத்தி பெற்றதாலும் இப்போது ஜெயலலிதா அந்தத் தொகுதிகளை புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
AIADMK general secretary Jayalalitha's election campaign plan has been changed completely. According to the changes, she has skipped most of the DMDK constituencies including Vijayakanth contested Rishivanthiyam.

சினிமாக்காரர்களை வெறுக்கும் ராமதாஸ் பேத்தி கல்யாணத்திற்கு கமல், ரஜினியை அழைக்கலாமா? -சரத் கேள்வி

தென்காசி: சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் கமல், ரஜினிக்கு கொண்டு சென்று கொடுத்து அழைத்தது எதற்காக என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


தென்காசி சட்டசபை தொகுதி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கிப் பேசினார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்காசி சட்டசபை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது,

நான் வித்தியசமான வேட்பாளர். தென்காசி தொகுதியை வளம் மிகுந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைக்க முழு முயற்சி எடுப்பேன்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் நான் தொகுதியிலேயே இருந்து மக்கள் பணியாற்றுவேன். நான் மட்டும் தொகுதி மாறி போட்டியிடவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தொகுதி மாறியே போட்டியிடுகின்றனர். அவரவர் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என ஜனநாயக நாட்டில் கூற முடியாது. பீட்டர் அல்போன்சும், கருப்பசாமி பாண்டியனும் சொந்த தொகுதியிலேயே போட்டியிடுகின்றனர்.

இன்றைக்கு தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் சந்திக்கலாம். வீடியோ கன்பிரன்ஸ் மூலம் சந்தித்து பேசலாம். தென்காசியில் எனக்கு முழு நேர அலுவலகம் செயல்படும். தென்காசி தொகுதியில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.

கடந்த 1996-ம் நடந்த தேர்தலில் என் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து என்னை சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க வந்தார். சினிமாவி்ல் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாதித்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்ய வந்துள்ளேன்.

சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் கமல், ரஜினிக்கு கொண்டு சென்று கொடுத்து அழைத்தது எதற்காக.

மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனாநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வரும் முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார். இது பற்றி அவர் என்னுடன் டிவியில் நேருக்கு நேர் மோத தயாரா? அப்போது அறிவாளி யார், மக்களை ஏமாற்றும் பேர்வழி யார், யார் என தெரிந்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary
SMK chief Saratkumar has challenged Peter Alfonse for a word battle. He has told that he is not in politics to earn money like Peter Alfonse. He has earned enough in cinema.