Sunday, March 27, 2011

மக்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றிவாகை சூடும் - சரத்குமார்!

மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் அதிமுக வெற்றிவாகை சூடும் என்று சமக தலைவர் சரத்குமார் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தென்காசியில் அளித்த பேட்டி:
தென்காசி தொகுதியை முன்னுதாரணமான தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். சொந்த தொகுதி என்பதெல்லாம் மாயைதான். மக்கள் பிரச்னைகளைத் தொகுதிக்கு வந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் இல்லை. விஞ்ஞான உலகில் போன், வீடியோ, இ.மெயில் என பல வகைகளிலும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ளலாம். என்னை வெற்றிபெற செய்தால் இதுபோன்று பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவேன். அதன்மூலம் என்னை மக்கள் தொடர்புகொள்ளலாம்.
பீட்டர் அல்போன்சுக்குச் சென்னைதான் தற்போது சொந்த ஊர். அவர் இங்கு வந்து போட்டியிடவில்லையா? ஏன் முதல்வரும், துணை முதல்வருமே மாற்றுத் தொகுதியில்தான் உள்ளனர். தொலைத் தொடர்பு வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வசதி உள்ளது. நேரில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.
இந்தத் தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. அதனைத் தீர்த்து வைக்க பாடுபடுவேன். காங்கிரசாரும், பாமவினரும் என்னை விமர்ச்சிக்கின்றனர். 96ம் ஆண்டு தேர்தலில் பீட்டர்அல்போன்ஸ் என்னைப் பிரசாரத்திற்கு அழைத்துச் செல்வதற்காக காத்துக் கிடந்தார். ஆனால் இன்று என்னைத் தாக்கி பேசுகிறார்.
பாமக தலைவர் ராமதாஸ் நடிகர்களே பிடிக்காது என்கிறார். பின்னர் எதற்கு தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நடிகர்களைப் பத்திரிகை வைத்து அழைக்கிறார். மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றித்தான் பேச வேண்டும். விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு நன்றாக இல்லை. விரைவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இங்குப் பிரசாரத்திற்கு வருகை தர உள்ளனர். வடிவேலு விஜயகாந்தை மேடையில் தரமற்ற முறையில் விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை முற்போக்கு திட்டங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. மக்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றிவாகை சூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment