Monday, January 9, 2012

வாகன ஓட்டிகளுக்கு வேகமல்ல, நிதானம் தான் முக்கியம்: சரத் குமார் பேச்சு

தென்காசி: கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 80 சதவீதம் இரு சக்கர வாகனங்களால் தான் நடந்துள்ளது என்று தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு வாரவிழா தென்காசி ஜெகநாத் அரங்கில் நடந்தது. இந்த விழாவுக்கு நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் பானு ஷமீம், துணை தலைவர் சுடலை, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட கிருஷ்ணன், செண்பகவல்லி, ரெட் கிராஸ் சுப்பிரமணியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

விழாவில் சரத்குமார் பேசியதாவது,

தமிழகத்தில் அதிகமான வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இது போன்ற சாலை பாதுகாப்பு வார விழாக்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு 64, 986 வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 2,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 80 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்களால் அதிக விபத்துகள் நடக்கிறது.

அதிக வேகத்தால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு வேகம் முக்கியமல்ல, நிதானம்தான் முக்கியம். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment