Friday, December 16, 2011

மாதாந்திர கல்வி உதவித்தொகை: முதல்வருக்கு பாராட்டு


சென்னை, டிச.13: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு 1ம் வகுப்பு முதல் மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.
.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருப்பதை பாராட்டி வரவேற்கிறேன்.

சமூக நீதியை நிலை நாட்டுவதிலும், சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக முனைப்புடன் செயல்பட்டுவரும் முதலமைச்சர் அதன் தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக பல்வேறு உதவிகளை வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராஜர், தொடர்ந்து சத்துணவுத் திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலிய எம்ஜிஆர் ஆகியோர் வரிசையில், உயர்கல்விக்கும், கல்லூரிப் படிப்பிற்கும் மட்டுமே உதவித்தொகை என்றில்லாமல் 1ம் வகுப்பிலிருந்தே உதவித்தொகை வழங்கியிருப்பது சிறப்பிற்கு உரியது.

100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டுமானால், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கல்வியைத் தொடராமல் இடையில் நின்றுவிடுவது தடுக்கப்பட வேண்டும்.  முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பின் அடிப்படையில் மாணவர்கள் முழுமையாக பள்ளிப் படிப்பை நிறைவு பெற்று 100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் வருங்காலத்தில் திகழ்வது உறுதி என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பிற்கு நன்றியும், பாராட்டும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இலவசங்களும், மானியங்களும் கல்விக்கும், வேளாண்மைக்கும் கிடைப்பதை எங்கள் இயக்கத்தின் கொள்கையாகக் கொண்டுள்ளோம்.  இவ்வாறு அறிக்கையில்  அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment