தென்காசி, ஜுன். 24–
தென்காசி தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் அங்குள்ள குளத்திற்கு தென்புறம் புதிதாக உறை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் சுடுகாடு இருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு உறைகிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சரத்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ. நேற்று அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்களில் சிலர் அந்த பகுதி அருகில் சுடுகாடு அமைந்திருப்பதால் அங்கு வெட்டப்படும் உறைகிணறு தண்ணீர் மாசுபட வாய்ப்பு உள்ளது. எனவே உறைகிணறு வெட்டும் பணியை நிறுத்தி விட்டு, வேறு இடத்தில் புதிதாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் சிலர் ஏற்கனவே அந்த பகுதியில் இருந்து ஆழ்துறை கிணறு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டதாகவும், இதனால் தண்ணீர் சுத்தமானதாகவே இருப்பதாக தெரிவித்தனர். இரு தரப்பினரிடம் சரத்குமார் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், பஞ்சாயத்து நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உறைகிணறு அமைக்கும் பணியை முழுவதுமாக முடித்து விட்டு, அதில் கிடைக்கும் தண்ணீரை சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். தண்ணீர் சுத்தமானதாக இல்லையென்றால் அந்த உறைகிணற்றை முழுமையாக மூடி விட்டு, புதிதாக தனது சொந்த செலவில் வேறு ஒரு இடத்தில் உறை கிணறு அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது தென்காசி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சங்கரபாண்டியன், பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகச்சாமி, ச.ம.க. மாவட்ட நிர்வாகிகள் துரை, கண்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் நந்து, ஊராட்சி செயலாளர் பண்டாரசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
