Monday, January 10, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1. 76 லட்சம் கோடி இழப்பு


மதுரை: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கபில் சிபலை நீக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1. 76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது. மேலும் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவையும், அவருடைய தொழில் கூட்டாளிகள் மற்றும் உறவினர்களையும் சி.பி.ஐ விசாரணை செய்து வருவது நாடறிந்த செய்தி.

2ஜி ஒதுக்கீடு பெற்ற கம்பெனிகள் பல இந்த ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தகுதியில்லாதவை என்றும், பிரதமர் அலுவலகம் அறிவுறுத்திய பல கருத்துக்கள் மீறப்பட்டிருக்கின்றன என்றும் தணிக்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சனையில் குற்றவாளிகளை கண்பிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் இவ்வளவு நாட்கள் கழித்து, இத்தனை சம்பவங்கள் நடந்த பிறகு, எதுவுமே நடக்காதது போல் 2ஜி ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்கு‌‌ரியது. இது விசாரணையை திசை திருப்பி உண்மையை மூடி மறைக்கும் தேசத் துரோக செயலாகும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு எதுவும் இல்லை என்று ஒரு மத்திய அமைச்சர், அதுவும் அதே தொலை‌த்தொடர்புத் துறையைச் சேர்ந்த அமைச்சரான கபில் சிபல் பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பது ஜனநாயக மாண்புகளை, தேசத்தின் உயர்ந்த அமைப்புகளை கேலிக்கூத்தாக்குவதற்கு சமமாகும்.

எனவே, ஊழல் செய்தவர்களை காப்பாற்ற பாடுபடும் கபில் சிபலை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் உடனடியாக நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment