சென்னை: தமிழகத்தை பிரிக்கக் கூடாது.. இந்த மாதிரி கோரிக்கைக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெலுங்கானா போராட்டத்தால் மத்திய அரசு ஆந்திராவை பிரிக்க அனுமதி அளிக்க முன்வந்த உடனேயே, பல மாநிலங்களில் அவரவர் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கின.
எந்தவித நியாயமான காரணங்களோ, முகாந்திரமோ இல்லாத நிலையில், தமிழகத்திலும், மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற குரல் எழுந்திருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.
முற்றிலும் அரசியல் ஆதாயம் கருதியும், தங்களால் இயன்ற அளவு குழப்பங்களை உண்டு பண்ணவுமே இத்தகைய அறிவிப்புகளை அவர்கள் வெளியிடும் போக்கை பொதுமக்கள் நன்கு அறிவார்கள். தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று எழுகின்ற குரலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் சேவைக்காகவும், ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளாமல், புதிதாக பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை பூதாகரமாக்குவது மக்களுக்கு நன்மை பயக்காது.
நாட்டின் ஒருமைப்பாடு கருதியே மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஒரே மொழி பேசப்படும் மாநிலத்தை பிரிப்பதன் மூலம், மொழியால், உணர்வால், கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட மக்களிடையே உரிமைகளும், சலுகைகளும் வேறுபடும் ஆபத்தும், அதனால் வீணான குழப்பங்களும், மோசமான விளைவுகளும் ஏற்படும் வாய்ப்புண்டு.
எனவே, இன்று டெல்லியில் நடைபெற இருக்கும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசு நிர்பந்தங்களுக்கும், போராட்டங்களுக்கும் பயந்து அடிபணிந்துவிடாமல், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணிக்க வேண்டும்.
சாதி அடிப்படையிலோ, பிற தேவையற்ற காரணங்களாலோ மாநிலங்களைப் பிரிப்பதற்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:
Post a Comment