பெருந்துறை, டிச. 27-
தமிழகத்தில் நல்லது நடக்க அமைதி புரட்சி ஏற்பட வேண்டும் என நடிகர் சரத்குமார் கூறினார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தொடங்கி வைத்தார். இந்த பேரணியின் நிறைவு விளக்க பொதுக்கூட்டம் பெருந்துறை பழைய பஸ்நிலையம் அருகில் நடந்தது.
இதில் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 85 கோடி மதிப்பில் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது திட்டமதிப்பீடு ரூ. 700 கோடியாக உயர்ந் துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் 9 ஒன் றியங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வீட்டிற்கு ஒரு விவசாயி என்ற நிலை வரும். உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்கும். எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு இனிமேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
காமராஜர் தொலை நோக்கு சிந்தனையோடு திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் இப்போது இங்கு ஓட்டு வங்கி அரசியல் நடக்கிறது. இலவச திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் உயர்ந்து விடாது. ஆகவே இலவச டி.வி. கொடுப்பதை விட அதை வாங்கும் சக்தியை ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்யதான் அரசியல் வாதிகளுக்கு மக்கள் பதவி அளிக்கிறார்கள். ஆகவே தவறு செய்தால் தட்டிக்கேட்க வேண்டும். உரிமைகளை கேட்டு பெற வேண்டும். வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் தருவார்கள். அப்போது உங்கள் கை பணம் வாங்க கூச வேண்டும். நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். அப்படி செய்தால்தான் நல்லது நடக்கும். அதற்கு இங்கு அமைதி புரட்சி வெடிக்க வேண்டும்.
நான் தமிழக முதல்- அமைச்சரை அடிக்கடி சந்திப்பதால் சமத்துவ மக்கள் கட்சி தி.மு.க. வுடன் இணைக்கப்படும் அல்லது கூட்டணி அமைக்கும் என்று சொல்லி வந்தார்கள். தற்போது அங்கு ஊழல் பெருகி விட்டது. எனவே தி.மு.க.வுன் கூட்டணி அமைக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கட்சியின் மாநில துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கருநாகராஜன், துணை பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்ல சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment