Thursday, December 30, 2010

தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி

மேட்டுப்பாளையம்,  டிச. 26-

வருகிற தேர்தலில் தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மேட்டுப் பாளையத்தில் இன்று மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் ச.ம.க. தலைவர் சரத்குமார்  மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி பேரணியாக சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டம் ரூ.85 கோடியில் தயாரிக்கப்பட்டது. அது கிடப்பில் போடப்பட்டதால் தற்போது திட்ட மதிப்பு ரூ.670 கோடி யாக உயர்ந்துள்ளது. செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பதை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த பேரணி நடைபெறுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் உலகலாவிய ஊழலாக உள்ளது. அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் கண்காணித்து வருகிறது. இப்படி இருக்கும் போது துணை முதல்வர் ஸ்டாலின் இழப்புகளை ஊழலாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுகிறார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அரசு விலைவாசியை கட்டுப்படுத்த கோராமல் கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி கோரி இருப்பது நீராராடியா உரையாடல் மூலம் அம்பலமாகி உள்ளது.

சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் தவறு செய்ய வில்லை என்று இவர்களாக கூறிக்கொள்ள முடியாது. அரசுக்கு இழப்பு என்றால் மக்களுக்கும் இழப்புதான். சமுதாயத்துக்கும் இழப்பு தான், பொருளாதாரத்துக்கும் இழப்புதான். சி.பி.ஐ. விசாரணை கண்துடைப்பா என்பது அதன் அறிக்கை வந்த பிறகுதான் தெரியும்.

வருகிற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும். அது தி.மு.க. அல்லாத கூட்டணியாக அமையும். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்னும் ஒருவாரத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும். ஜனவரி 21-ந்தேதி அரசலூரில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள் விற்பனை தொடங்கப்படுகிறது. கள் இயக்கத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவளிக்கும்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்

No comments:

Post a Comment