தனது பிறந்த நாளை சரத்குமார் எளிமையான முறையில் கொண்டாடினார். ஈழத் தமிழர்களுக்காக இனி தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்த அவர், தனது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் என்றார்
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார். என்னுடைய பிறந்த நாளை இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறேன். இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும், மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமான உதவிகளையும் ஏழை எளியோருக்கு நல உதவிகளும் கட்சி நிர்வாகிகள் மூலம் இன்று வழங்கப்படுகிறது.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மிகுந்த வருத்தத்தை தருகிறது. ஏற்கனவே கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இப்போது நடந்துள்ள குண்டுவெடிப்பு நமக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதற்கு மத்திய உளவுத்துறை செயல்படாததே காரணமாகும். உளவுத்துறையை பலப்படுத்தி இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தக்க பாதுகாப்பு நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் போர்க்குற்றம் இழைத்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசினை சேர்த்துக்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றினார். இந்தியாவுக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. மேலும் தெற்கிலும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதும், இலங்கை அரசால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை துணிச்சலான நடவடிக்கை. இது மிகவும் பாராட்டத்தக்கது. இதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய திருநாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக ஆகின்றார் என்றார் சரத்குமார்

No comments:
Post a Comment