Saturday, October 1, 2011

அ.தி.மு.க கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்: சரத்குமார்

சென்னை, அக்.1: நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும், திருச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கூட்டணியில் நீடிப்பது என்று கட்சி தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளிலும், மற்ற மாவட்டங்களிலும், நகராட்சிகளிலும் நம் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அனைத்துப் பகுதிகளிலும் இடங்கள் பெற்றுத்தர இயலாவிட்டாலும், கூட்டணி முக்கியம் என்ற அடிப்படையில் நம் அணியின் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும். 

எந்த ஒரு முடிவும் கட்சியின் மேலிடம் கூடி ஆலோசித்து, பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு, கட்சியின் வளர்ச்சியை மனதில் கொண்டு சில சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பாடுபடும் தொண்டர்கள், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து சட்டப்பேரவை தேர்தலில் காட்டிய, அதே உத்வேகத்தை வெளிப்படுத்தி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலிலும், திருச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பெரும் வெற்றியடைய நாம் அயராது பாடுபட வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment