Wednesday, February 22, 2012

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டுகோள்

சென்னை,பிப்.21 - கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு நாட்டின் நலன் கருதி உதயகுமார் குழுவினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர்விடுத்துள்ள அறிக்கை வருமாறு; கூடங்களம் அணுமி ன் நிலையம் மூடப்படவேண்டும் என்று உதயகுமார் தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே . கூடங்குளம் அணுமி ன் நிலையம் திறப்பதால் அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இப்போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், முதலமைச்சர் ஆணைக்கிணங்க, போராட்ட குழுவினருடன் இணைந்து பாரத பிரதமர் அவர்களை சந்தித்து, மக்களின் அச்ச உணர்வை போக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் மீண்டும் மத்திய அரசு ஒரு குழு அமைத்து மக்களின் அச்ச உணர்வை போக்கும் முயற்சியை தொடர்ந்து வருகிறது போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் முதல் அமைச்சர் அண்மையில் நடந்த சட்டமன்றத் தொடரில் அறிவித்தபடி கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆர்.சீனிவாசன் தலைமையில் தமிழ்நாட்டின் சார்பில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர். அக்குழு அரசிடம் கூடிய விரைவில் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கினாலும், மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் மேலும் மேலும்  மின்சார தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருந்தும், அதற்காக தீர்க்கமான முடிவு எடுக்காத காரணத்தினாலும், மின் கசிவினாலும், மின்திருட்டினாலும் அனல் மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை சரிவர கவனிக்காததாலும், மின் தேவையை சமாளிக்க முடியாமல் மின் தடையினால் கடந்த ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டதை நாம் அறிவோம்.
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிகமிக அவசியம் என்பதை நன்கு உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் மின்சாரத் துறையை சீர்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பராமரிப்பு பணிகளின் மூலம், மின் உற்பத்தியை சீர்படுத்த முயற்சி எடுத்து,  தமிழகத்தை மின் வெட்டே இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப் சிறிய, பெரிய தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட மின் தேவைகள், மின் உற்பத்தியைவிட அதிகரித்துக் கொண்டே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு என்ன செய்வதென்று நாம் சிந்திக்கிற போது கையில் வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலைவானேன்? என்ற பழமொழிக்கேற்ப உடனடி நிவாரணம் அளிக்க நம் கண் எதிரே தோன்றுவது கூடங்குளத்தின் மூலமாக நமக்கு கிடைக்க இருக்கும் 925 மெகாவாட் மின்சாரம் என்பதை நாம் உணர வேண்டும். அடுத்தடுத்து 3-வது, 4-வது அணு உலைகள் தொடங்கப்படும் போது மேலும் 2000 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இருப்பதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் எண்ணமும், தமிழக மக்கள் அனைவரின் எண்ணமும், உதயகுமார் எண்ணமும், நமது எண்ணமும், நம் மக்களின் அச்சத்தை போக்க வேண்டு என்பதுதான். அந்தப்பணியை நாம் ஒன்றுபட்டு செய்திட முடியும். அதேசமயம் தமிழக மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு நேற்று மின் வெட்டினால் பாதிக்கப்படுகின்ற தொழிற்சாலைகள், அதனால் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் கல்விக்கூடங்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பட்ட மக்களும் இருளில் தள்ளப்படுவதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
ஆக நாட்டு மக்களின் நலன்கருதி, நமது நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு, தமிழகத்தை இருள் சூழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சுகின்ற நிலையில் உதயகுமார் அப்பகுதி மக்களும் மாநில, மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்டு தமிழகம் ஒளிபெற, கூடங்குளம் பகுதி மக்களின்  பாதுகாப்பு நிலையை உறுதிசெய்திட நாம் இணைந்தே பாடுபடுவோம். போராட்டக் குழுவினர் கூடங்களம் அணுமின் நிலையம் திறக்கப்பட நல் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன்  கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment