ராமேசுவரம், பிப். 19-
இலங்கை கடற்படையை கண்டித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அதனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கட்சியின் தலைவர் சரத்குமார் பேசிய தாவது:-
இந்தியா-இலங்கை இடையே உள்ள கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது சீனா தனது படைகளை படிப்படியாக குவித்து வருகிறது. இது நமது நாட்டிற்கு ஆபத்து ஆகும். இந்த ஆபத்தில் இருந்து மீள வேண்டுமானால் கச்சத் தீவை மீட்டு அங்கு நமது பாதுகாப்புக்காக படை பலத்தை நிறுத்த வேண்டும். ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும்.
இருநாட்டு மீனவர்களையும் அழைத்து சுமூகமான முறையில் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்பதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட மாவட்ட, மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டு உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு சரத்குமார் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

No comments:
Post a Comment