சென்னை, ஆக.- 15 - நாடெங்கும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய சமத்துவ
மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள செய்தி வருமாறு:- நாம்
66-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்வோம். நாம் ஏற்க வேண்டிய
சபதங்கள் எத்தனையோ இருப்பினும் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைப்
போற்றி பேணிக்காப்பதில் நாம் மேலும் உறுதியான நடவடிக்கைகளில் இறங்கிட
வேண்டும். நம் நாட்டின் உயர்ந்த பாரம்பரிய பண்புகள் பழக்க வழக்கங்களைவிட
மேற்கத்திய கலாச்சாரங்கள் உயர்ந்தவை அல்ல. அவற்றிலிருந்து தேவையானதை
எடுத்துக் கொள்ள வேண்டும், அவற்றிற்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.
ஜனநாயகப் பண்புகளைப் போற்ற வேண்டும். தனி மனித ஒழுக்கங்களை எல்லோரும்
கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா 100 சதவிகிதம் கல்வி வளர்ச்சி பெற்ற நாடாக
அறிவிக்கும் பொருட்டு அனைவரும் பாடுபட வேண்டும், நேதாஜி சுபாஸ்
சந்திரபோஸ், மகாத்மாகாந்தி, நேருஜி, வல்லபபாய் பட்டேல், திலகர்,
வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற
சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் உழைப்பையும், அவர்கள்
இந்த தேசத்திற்காக பாடுபட்டதையும் நம் இளைஞர்களுக்கும்,
சந்ததியினர்களுக்கும் விளக்க வேண்டும். அவர்கள் வழி நடக்க வேண்டும்.
சமத்துவம் வளர, சமதர்மம் நிலைத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment