ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று சமக தலைவரும் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் கூறினார்.
சரத்குமார் மற்றும் நாங்குநேரி தொகுதி சமக சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சனிக்கிழமையன்று நெல்லை வந்தனர். அவர்களுக்கு பாளை கேடிசி நகரில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கணேசன், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னை அபார வெற்றிபெற செய்த தென்காசி தொகுதி மக்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (நேற்று) முதல் தொகுதியில் 5 நாட்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்துள்ளேன். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தென்காசி தொகுதியை பொறுத்தவரைக்கும் பல கோரிக்கைகள் உள்ளன. குறிப்பாக கருப்பாநதி திட்டம், தென்காசி தனி மாவட்டம், மேம்பால சர்வீஸ் ரோடு உள்ளிட்ட பணிகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
மேலும் தொகுதியில் உள்ள மக்கள் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்படும். ஆலங்குளம் ஒன்றியத்தில் இன்று (நேற்று) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஜெயலலிதா தலைமையிலாக அமைந்துள்ள அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
குற்றால சீசன் விரைவில் தொடங்க உள்ளது, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். குற்றாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைப் பொதுச்செயலாளர் இளஞ்சேரன், மேற்கு மாவட்ட செயலளார் தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment