Sunday, June 19, 2011

ரேஷன் பொருட்கள் வினியோகம் முறைகேடு வேண்டாம்:- சரத்குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள்

தென்காசி : "ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்வதில் முறைகேடு வேண்டாம்' என தென்காசி எம்.எல்.ஏ.சரத்குமார் கூறியுள்ளார்.

 ரேஷன்  அட்டை உள்ளவர்களுக்கு 20 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் முறைகேடுகள் ஏதும் நடக்க கூடாது என முதல்வர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தென்காசியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ரேஷன் அரிசி வாங்க செல்லும் பொதுமக்களிடம் மாற்று பொருட்கள் ஏதேனும் வாங்கினால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர் கூறியுள்ளார். இதுபற்றி தென்காசி எம்.எல்.ஏ.சரத்குமாரிடம் பொது மக்கள் புகார் கூறினர்.

இதனையடுத்து எம்.எல்.ஏ.சரத்குமார் குறிப்பிட்ட ரேஷன் கடைக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது சரத்குமார் கூறும்போது, ""தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களில் முதன்மையானது இலவச அரிசி வழங்கும் திட்டம். இதன் முழு பலன் ஏழைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி கிடைக்க வேண்டும் என்பதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அரிசி வழங்கும் போது தொகுதி மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமலும் எவ்வித குறைவுமின்றி சிறப்பாக செயல்பட்டு முதல்வர் திட்டத்தை செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும். ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபடாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்'' என்றார். ரேஷன் கடை ஊழியர்களும் தவறு ஏதும் ஏற்படாமல் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்கிறோம் என்று உறுதியளித்தனர்.அதன் பிறகு சரத்குமார் அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment