Thursday, September 1, 2011

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: சரத்குமார்


தமிழக அரசு கொண்டுவந்துள்ளதீர்மானத்தை மத்தியஅரசு ஏற்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ச.ம.க. தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூவரின் கருணை மனு, குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்ட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இதனை மாற்றும் அதிகாரம் தமிழக முதல்வருக்கு இல்லை என்பதைத் தெளிவாக்கி சட்டப் பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.

இருப்பினும், மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றியதை ச.ம.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பாராட்டி வரவேற்கிறேன்.

தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக மக்களுக்கு இணையாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். இது இலங்கைத் தமிழர்களின் நலனில் அவரது அக்கறையையும், உண்மையான உணர்வையும் பிரதிபலிக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, தமிழக மக்களுக்கு இணையாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். தென் மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில், விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும். இதனை ஏழை எளிய மாணவ மாணவிகளின் நலன் கருதி, திறந்த வெளி நீச்சல் பயிற்சி பள்ளியை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment