சென்னை, செப். 18: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காததன் மூலம் திமுக எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு துரோகம் செய்கின்றனர் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.சமத்தும மக்கள் கட்சியின் 4-வது ஆண்டு விழா, சென்னை கந்தன்சாவடியில் சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட சரத்குமார் பேசியது:கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததுதான் தி.மு.க. செய்த சாதனை. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிரிப்பு பிரசாரம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.சட்டப்பேரவைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் வருகிறார்கள். திருக்குறள் கேட்டுவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். இது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம். தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள். திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்ற மு.க. அழகிரி இன்று எங்கிருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி தூணாக இருந்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.ராஜபட்சேவுடன் சேர்ந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்திய இறையாண்மையைக் காப்பாற்ற கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார் சரத்குமார்.நிகழ்ச்சியில் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஜே.நாதன், அவைத்தலைவர் வி.செல்வராஜ், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தரேசன், மணிமாறன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment