Tuesday, February 28, 2012

பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்: ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

சென்னை: பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்க முடிவு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமக தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் மின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்குவதற்கு கடந்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழகம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

இதை சீர்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் வெளிப்பாடாக பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் தமிழக அரசு பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குதல், 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற நல்ல பல திட்டங்களை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பள்ளி இறுதித் தேர்வு நெருங்கும் நிலையில் மின்பற்றாக்குறை காரணமாக மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு அமர்த்தி அதற்கு உண்டான டீசல் உள்பட அனைத்து செலவுகளையும் வழங்குவதோடு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும் வாடகைக்கு ஜெனரேட்டர்கள் எடுத்தால் அதற்குண்டான கூடுதல் செலவுகளை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 22, 2012

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டுகோள்

சென்னை,பிப்.21 - கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு நாட்டின் நலன் கருதி உதயகுமார் குழுவினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர்விடுத்துள்ள அறிக்கை வருமாறு; கூடங்களம் அணுமி ன் நிலையம் மூடப்படவேண்டும் என்று உதயகுமார் தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே . கூடங்குளம் அணுமி ன் நிலையம் திறப்பதால் அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இப்போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், முதலமைச்சர் ஆணைக்கிணங்க, போராட்ட குழுவினருடன் இணைந்து பாரத பிரதமர் அவர்களை சந்தித்து, மக்களின் அச்ச உணர்வை போக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் மீண்டும் மத்திய அரசு ஒரு குழு அமைத்து மக்களின் அச்ச உணர்வை போக்கும் முயற்சியை தொடர்ந்து வருகிறது போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் முதல் அமைச்சர் அண்மையில் நடந்த சட்டமன்றத் தொடரில் அறிவித்தபடி கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆர்.சீனிவாசன் தலைமையில் தமிழ்நாட்டின் சார்பில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர். அக்குழு அரசிடம் கூடிய விரைவில் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கினாலும், மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் மேலும் மேலும்  மின்சார தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருந்தும், அதற்காக தீர்க்கமான முடிவு எடுக்காத காரணத்தினாலும், மின் கசிவினாலும், மின்திருட்டினாலும் அனல் மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை சரிவர கவனிக்காததாலும், மின் தேவையை சமாளிக்க முடியாமல் மின் தடையினால் கடந்த ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டதை நாம் அறிவோம்.
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிகமிக அவசியம் என்பதை நன்கு உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் மின்சாரத் துறையை சீர்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பராமரிப்பு பணிகளின் மூலம், மின் உற்பத்தியை சீர்படுத்த முயற்சி எடுத்து,  தமிழகத்தை மின் வெட்டே இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப் சிறிய, பெரிய தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட மின் தேவைகள், மின் உற்பத்தியைவிட அதிகரித்துக் கொண்டே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு என்ன செய்வதென்று நாம் சிந்திக்கிற போது கையில் வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலைவானேன்? என்ற பழமொழிக்கேற்ப உடனடி நிவாரணம் அளிக்க நம் கண் எதிரே தோன்றுவது கூடங்குளத்தின் மூலமாக நமக்கு கிடைக்க இருக்கும் 925 மெகாவாட் மின்சாரம் என்பதை நாம் உணர வேண்டும். அடுத்தடுத்து 3-வது, 4-வது அணு உலைகள் தொடங்கப்படும் போது மேலும் 2000 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இருப்பதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் எண்ணமும், தமிழக மக்கள் அனைவரின் எண்ணமும், உதயகுமார் எண்ணமும், நமது எண்ணமும், நம் மக்களின் அச்சத்தை போக்க வேண்டு என்பதுதான். அந்தப்பணியை நாம் ஒன்றுபட்டு செய்திட முடியும். அதேசமயம் தமிழக மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு நேற்று மின் வெட்டினால் பாதிக்கப்படுகின்ற தொழிற்சாலைகள், அதனால் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் கல்விக்கூடங்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பட்ட மக்களும் இருளில் தள்ளப்படுவதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
ஆக நாட்டு மக்களின் நலன்கருதி, நமது நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு, தமிழகத்தை இருள் சூழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சுகின்ற நிலையில் உதயகுமார் அப்பகுதி மக்களும் மாநில, மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்டு தமிழகம் ஒளிபெற, கூடங்குளம் பகுதி மக்களின்  பாதுகாப்பு நிலையை உறுதிசெய்திட நாம் இணைந்தே பாடுபடுவோம். போராட்டக் குழுவினர் கூடங்களம் அணுமின் நிலையம் திறக்கப்பட நல் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன்  கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, February 21, 2012

கச்சத்தீவை மீட்கக்கோரி ராமேசுவரத்தில் சரத்குமார் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம், பிப். 19-
இலங்கை கடற்படையை கண்டித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அதனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கட்சியின் தலைவர் சரத்குமார் பேசிய தாவது:-
இந்தியா-இலங்கை இடையே உள்ள கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது சீனா தனது படைகளை படிப்படியாக குவித்து வருகிறது. இது நமது நாட்டிற்கு ஆபத்து ஆகும். இந்த ஆபத்தில் இருந்து மீள வேண்டுமானால் கச்சத் தீவை மீட்டு அங்கு நமது பாதுகாப்புக்காக படை பலத்தை நிறுத்த வேண்டும். ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும்.
இருநாட்டு மீனவர்களையும் அழைத்து சுமூகமான முறையில் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
கச்சத்தீவை மீட்பதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட மாவட்ட, மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டு உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு சரத்குமார் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Friday, February 10, 2012

சங்கரன்கோவில் தேர்தல்: சரத்குமார் அ.தி.மு.கவுக்கு ஆதரவு

சென்னை, பிப். 11 - சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்து தேர்தல் பணியாற்ற சமத்துவ மக்கள் கட்சி சார்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அமைத்துள்ளார். அந்த குழுவில் நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் நாராயணன், பொதுச் செயலாளர் நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், துணை பொதுச் செயலாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி எம்எல்ஏ ஏ.நாராயணன் மகள் திருமணம்

சென்னை, பிப்.3: முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ஏ.நாராயணன் தனது மனைவி லதாவுடன் சந்தித்து தனது மகளின் திருமணத்துக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.இந்த சந்திப்பின்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சரத்குமார் உடன் இருந்தார்.

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், லதா தம்பதியரின் மகள் சகிலா, திருச்சி கே.ஏ.எஸ்.ராம்தாஸ், ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு திருமணம் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் நேற்று காலை நடந்தது. மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் எம்எல்ஏ, அவரது மனைவி ராதிகா ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர். இராவணன் மசாலா குழுமத்தின் தலைவர் ராமசாமி, தமிழ்நாடு நாடார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் எச்.ஸ்டீபன், வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கே.எஸ்.மூர்த்தி, பொதுச் செயலாளர் விவேக் சிவசாமி, சமக மாநில அமைப்பு செயலாளர் பாவூர் சத்திரம் ஆர்.கே.காளிதாஸ், துறைமுகம் பகுதி வடசென்னை மாவட்ட நாடார் பேரவை தலைவர் கே.மகராஜன், கராத்தே ச.ரவி, மற்றும் சமக நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், பல்வேறு கட்சியினர் மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்களை எர்ணாவூர் ஏ.நாராயணன், சென்னை டீலக்ஸ் ஓட்டல் இயக்குனர் என்.கார்த்திக் வரவேற்றனர்.