
சென்னை, ஏப்.- 4 - தென்காசியை தனிமாவட்டமாக அமைத்திட வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் கோரியுள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:- தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வேண்டும் தென்காசி நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட 4 இடங்களில் நீர் உந்து நிலையங்கள் உள்ளன. அதில் 4 பகுதி மின் இணைப்புகள் உள்ளன. இந்த திட்டத்திற்கு நீர் வழங்கும் போது அந்த இடத்தில் மின்சாரம் இருந்தால் மறு இடத்தில் இருக்காது. இதனால் மின்சார தடையால் நீர் உந்துவதில் தடைபடுகிறது. இதை தவிர்த்திட தாமிரபரணி நீர் உந்துதல் ஆரம்ப இடத்திலிருந்து 4 நிலையங்களுக்கும் ஒரே இடத்தில் இருந்து மின் இணைப்பு வழங்க வேண்டும். இதனால் குடிநீர் நகராட்சி மக்களுக்கு போதுமான அளவில் கிடைத்துவிடும். இந்த இணைப்பிற்கு அரசு உத்தரவிட வேண்டும். தென்காசி நகரில் அமைக்கப்படவுள்ள புற வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த அரசு நிதி வழங்கியுள்ளது. சாலைக்கும் இந்த ஆண்டே நிதி வழங்கி அப்பணி நிறைவு செய்திட வேண்டும். தென்காசி நகரில் பழைய பேருந்து அருகிலுள்ள குளத்தை ஆழப்படுத்தி, படகு போக்குவரத்து இதர ஏற்பாடுகள் செய்து சுற்றுலா இடமாக மாற்றிட ஆவண செய்திட வேண்டும். ஆளுநர் உரையில் 2011-12-ல் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரியை தென்காசி தொகுதியில் அனுமத்திட வேண்டும். வீரகேரளம் புதூரில் கால்நடை மருத்துவமனை அமைத்திட வேண்டும். வீரகேரளம்புதூர் வட்டத்திலுள்ள ஊத்துமலை அதை சுற்றியுள்ள 15 ஊராட்சிகள் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுதால் இதற்கென தாமிரபரணியில் இருந்து ஒரு குடிநீர் திட்டத்தின் மூலம் ஊத்துமலையை மையமாக வைத்து குடிநீர் திட்டம் அமைத்திட வேண்டும். வீரகேரளம்புதூர் ஊராட்சி வீராணம் ஊத்துமலை, வழியாக சங்கரன்கோவில், ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளன. இதற்கென ஒரு சிறப்பு நிதி ஒதுக்கி சாலைகளை சரி செய்திட வேண்டும். பாவூர்சத்திரம், சுரண்டை ஆகிய இடங்களில் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் இவைகளை பாதுகாத்திட குளிர்சாதன வசதியுள்ள கிடங்குகள் அமைத்திட வேண்டும். தென்காசி தொகுதியில் சுந்தரபாண்டியபுரம், வீ.கே.புதூர் ஆகிய இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட வேண்டும். ஊத்துமலையை சுற்றி மேய்ச்சல் நிலங்கள் அதிகம் இருப்பதால் வறுமைக் கோட்டு விவசாயிகள் விவசாய கூலிகளுக்காக கறவை மாடுகள், ஆடுகள் அரசின் மானிய உதவி மற்றும் வங்கி கடன் மூலம் பெற்றிட சிறப்பு திட்டம் அரசு வழங்க வேண்டும்.
குற்றாலத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுந்திடவும், மக்கள் நாள் முழுவதும் சுற்றுலாவை அனுபவிக்க ஒரு கொள்கை விளக்க பூங்கா அமைத்திட வேண்டும்.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் தென்காசி பகுதி விவசாயிகளுக்கு விதை சேமிப்புக்கு ஒதுக்கப்பட்ட ரூ.25 லட்சத்தை வேறு இடம் தேர்வு செய்து விதை சேமிப்பு கிடங்கு கட்டிட வேண்டும்.
தென்காசியில் அமைந்துள்ள பட்டு வளர்ச்சி துறையில் ஊழியர் கூடுதலாக்கி பட்டு வளர்ச்சியை விவசாயிகளிடம் விளக்கி அதிக அளவு பயிரிட வேண்டும்.
தென்காசி நகரில் நகரம் பாதுகாப்புக்காக மேலும் ஒரு காவல் நிலையம் அமைத்திட வேண்டும்.
குற்றாலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் ஒன்றை திறந்துமக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
திருக்குற்றால குறவஞ்சியை பாடிய திருகூட ராசப்ப கவிராயருக்கு விழா எடுத்திட வேண்டும்.
குற்றாலத்தின் அருகிலுள்ள கேரள அரசின் கல்லடா சுற்றுலா மையத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலா மையமாக குற்றாலத்தை அமைத்திட வேண்டும்.
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திட வேண்டும்.
இதற்கென முன்பு மருத்துவமனையாக இருந்த இடத்தைப் பயன்படுத்திட வேண்டும்.
பாவூர்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் அளவுக்கு வாறுகால், சிறுபாலங்கள் அமைத்திட வேண்டும்.
தென்காசி தலைமை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், மற்றும் போதுமான மருத்துவர்களையும் இதர அலுவலர்களையும் நியமித்திட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம் பாவூர்சத்திரம் சுந்தரபாண்டியபுரம், அரியப்பபுரம் ஆகியவைகளில் பெண் மருத்துவர்களையும், போதுமான மருத்துவர் மற்றும் ஊழியர்கள் நியமித்திட வேண்டும். நோயாளிகளுக்கு ஒவ்வொரு நிலையத்திலும் 20 படுக்கைகள் அமைத்திட வேண்டும்.
தென்காசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், வைப்பதற்கு கட்டிடமும், சித்த மருத்துவப் பிரிவுக்கு வழங்கப்பட்ட கருவிகளை மக்கள் பயன்படுத்திட ஒரு கட்டிடமும் கட்டிட நிதி ஒதுக்கிட வேண்டும்.
சுரண்டை பேரூராட்சி பகுதியில் அரசுப் பேரூந்து பணிமணை ஒன்ற அமைத்திட வேண்டும்.
கிராமங்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் கழிவறை வசதியை அரசே செய்து கொடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.