Monday, January 31, 2011

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நடிகர் சரத்குமார் பேட்டி

கடலூர், ஜன.29-

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இந்த சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் நாகையில் இருந்து கட்சியின் நிர்வாகிகளுடன் காரில் சிதம்பரம் வழியாக சென்னைக்கு புறப்பட்டு வந்தார். கடலூர் முதுநகர், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் சரத்குமாருக்கு கடலூர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் சரத்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

பதில்:- இந்திய கடல் எல்லையில் மிதவை மற்றும் ரோந்து கப்பல்களை மத்திய அரசு கூடுதலாக விட வேண்டும். கட்சத் தீவை மீட்டு, மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விட வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.

கேள்வி:- தேர்தல் கூட்டணி பற்றி..?

பதில்:- கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.வரவேற்பு நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பிச்சு மணி, வடலூர் நகர செயலாளர் வீரசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், தெய்வகுமார், சிங்காரம், இளைஞர் அணி ரகுநாதன், சந்திரசேகர், வடலூர் நகர செயலாளர் வீரசேகரன், தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில செயலாளர் கஜேந் திரன், மாவட்ட தலைவர் சுப்புராயன், இளைஞர் பேரவை தலைவர் கோகிலன், இணை செயலாளர் ராமு, பொருளாளர் கந்தாசமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 1

சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து 10 நாளில் அறிவிப்பேன்; நெல்லையில் சரத்குமார் பேட்டி

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சரத்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி கபில்சிபில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய மந்திரி கருத்து சொல்வது தவறு. அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒதுக்கீடும் ஊழல்தான். இது தொடர்பாக மக்களிடம் நாங்கள் விளக்கிச்சொல்வோம்.
கே:- தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?
ப:-விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயரும் போதெல்லாம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மறைமுகமாக மத்திய அரசுக்கு துணை போகிறது. மக்கள் பிரச்சினைக்காக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வருகிற பிப்ரவரி 15-ந்தேதி தொடர் போராட்டம் நடத்தப்படும்.
கே:- சட்டசபை தேர்தலுக்கு ச.ம.க. தயாராகிவிட்டதா?
ப:-தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். எங்களை பொறுத்தவரை பதவி முக்கியமல்ல. நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து முதல் - அமைச்சர் ஆக்க வேண்டும்.
கே:- ச.ம.க.தேர்தல் கூட்டணி அமைக்குமா?
ப:-கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.
கே.எந்த கட்சியுடன் கூட்டணி?
ப:- தி.மு.க.வை எதிர்க்கிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
கே:- சட்டசபை தேர்தலில் 3-வது அணி அமையுமா?
ப:- அமைய வாய்ப்பில்லை.
கே:- அப்படியென்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று எடுத்துக்கொள்ளலாமா?
ப:-இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எது வானாலும் 10 நாட்களில் அறிவிப்பேன்.
கே:- கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ப:- விரைவில் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும். தென்காசியில் வருகிற பிப்ரவரி 6-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெறும். அதற்குள் கூட்டணி முடிவாகி விட்டால் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
கே:- தேர்தலில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?
ப:- இருக்கலாம். ஆலங்குளம், ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம் போன்ற பல்வேறு தொகுதிகளில் நான் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ச.ம.க. துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், நெல்லை மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தடுப்பூசிக்கு குழந்தை பலி: சரத்குமார் அறிக்கை

சென்னை, ஜன. 24-

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேற்று தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் சிறு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்தது. அப்படி மருந்து அளித்த 2 மணி நேரத்திற்குள் காஞ்சி மாவட்டம் படப்பையில் 2 வயது குழந்தை திடீரென உயிர்நீத்த பரிதாபம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் 4 குழந்தைகள் தடுப்பு ஊசி போட்ட உடன் இறந்திருக்கிறார்கள். பொது மக்கள் இதுபோன்ற நிகழ்வுகளால் அச்சமும் ஐயமும் கொள்வதை தவிர்க்க முடியாது. ஏற்கனவே போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டபாடில்லை. அரசு மீண்டும் மெத்தனமாக இருந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நோய் தடுப்பு மருந்தே உயிர்க்கொல்லியாக மாறுவதை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழப்பதோடு, அரசு வழங்கும் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ள அச்சப்பட்டு தயங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். எனவே அரசு மருத்துவ சேவைகளின் மூலம் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Saturday, January 22, 2011

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர். சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து அறிவிக்கலாம் என்று முடிவெடுத்த பிறகு 6 முறைகளும், மொத்தத்தில் இது வரை கடந்த ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் கோடிக் கணக்கான நடுத்தர மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவது டன் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். இது போன்ற நிலை தொடர்ந்து நீடித்தால் அரசுகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.   எனவே, இந்த விலை உயர்வை கடந்த முறை உயர்த்தியதை தவிர்த்து நேற்று அறிவித்த விலை உயர்வையாவது எண்ணை நிறுவனங்கள் திரும்பப்பெற வேண்டும். அனைத்து பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நேற்றைய பெட்ரோல் விலை உயர்வு மேலும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைந்து விடும் என்பது உறுதி.
வளரும் நாடுகளுக்கு சப்ளையாகும் கச்சா எண்ணையின் விலையை வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு உயர்த்தக்கூடாது என்று வேண்டுகோள் வைக்க வேண்டும். இதற்கு, மத்திய அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடனடி நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   இதேபோல சபரிமலை விபத்தில் உயர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Friday, January 21, 2011

அரச்சலூரில் இன்று தடையைமீறி “கள்” இறக்கி விற்பனை

தமிழ்நாட்டில் கள் இறக்க அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு கள் இயக்கம் கள்இறக்க அனுமதி வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தடையை மீறி கள் இறக்கி விற்கும் போராட்டத்தை கள் இயக்கம் அறிவித்தது.
 
இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு முதல் விற்பனையைபெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அரச்சலூரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் திரண்டனர்.
 
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தென்னந் தோப்புகளில் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் காலை 9.30 மணிக்கு ஒரு தென்னை மரத்துக்கு பூஜை செய்து பின்னர்கள் இறக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
 
இதில் கள் இயக்க மாநில அமைப்பாளர் கதிரேசன், தென்னை மற்றும் பனைமரத் தொழிலாளர்கள் சங்க மாநில துணை தலைவர் முருகன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில் சில நிமிடம் கழித்துகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கள் இறக்கி சிலருக்கு விற்பனை செய்தார். இதை கண்ட போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
 
இந்த கள் இறக்க போராட்டத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து பேசினர். கள் இயக்க அனுமதி வழங்க வேண்டும், தடையை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
 
அரச்சலூரில் நடைபெறும் கள் இறக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் இன்று காலை 11.40 மணி அளவில் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வழியாக வந்தார்.
 
அவரை சமத்துவமக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் நாராயணன், மாநில பொதுச்செயலாளர் நாகராஜ், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், இளைஞர் அணி செயலாளர் கராத்தே சரவணன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆஸ்டின், பொதுக்குழு உறுப்பினர் இளையராஜாக, அந்தியூர் ஒன்றிய செயலாளர் குருநாதன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் தர்மராஜ், துணைச் செயலாளர் சீனிவாசன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
 
பின்னர் சரத்குமாரருக்கு சால்வை அணிவித்தனர். சரத்குமாரை ஏராளமான பொதுமக்கள் கூடிநின்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சரத்குமார் அரச்சலூர் புறப்பட்டு சென்றார்.
 
அரசு பால் வியாபாரம் செய்வதுபோல் கள்ளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்: சரத்குமார் பேட்டி
 
அரச்சலூரில் நடைபெறும் கள் இறக்கிவிற்கும் போராட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று கோவையில் இருந்து புறப்பட்டு வந்தார். அவருக்கு பெருந்துறை பஸ்நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் திரளாக நின்று வரவேற்பு கொடுத்தனர்.
 
அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வாழ்த்து கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதன்பிறகு சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
1967-ம் ஆண்டு அண்ணா முதல்- அமைச்சராக பதவி ஏற்றபோது பூரண மது விலக்குதான் எங்கள் கொள்கை. சாராயக் கடைகள் திறந்தால்தான் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றால் எனக்கு இந்த பதவி தேவை இல்லை. துண்டை தோளில் போட்டுக்கொண்டு சென்று விடுவேன் என்று அண்ணா சொன்னார்.
 
ஆனால் இன்று மதுக்கடைகளில் பலவகையான மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கள்ளில் குறைந்த அளவே ஆல்கஹால் உள்ளது. எனவே கள்ளை விற்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு பால் வியாபாரம் செய்வது போல கள்ளையும் கொள்முதல் செய்து டின்கள், கேன்களில் அடைத்து விற்க வேண்டும்.
 
சுமார் 10 லட்சம் தென்னை மற்றும் பனை ஏறும் தொழிலாளர்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள். எங்களது கட்சியின் கொள்கை பூரண மதுவிலக்குதான். இதை எங்கள் தேர்தல் அறிக்கையிலும் வலியுறுத்துவோம். மது கடைகளை மூடினால் கள்ளச்சாரய விற்பனை அதிகமாகி விடும் என்று கூறுகிறார்கள்.
 
இதை அரசோ... போலீசாரோ... தடுக்க முடியாதா? இவ்வாறு அவர் கூறினார். 

Monday, January 10, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1. 76 லட்சம் கோடி இழப்பு


மதுரை: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கபில் சிபலை நீக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1. 76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது. மேலும் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவையும், அவருடைய தொழில் கூட்டாளிகள் மற்றும் உறவினர்களையும் சி.பி.ஐ விசாரணை செய்து வருவது நாடறிந்த செய்தி.

2ஜி ஒதுக்கீடு பெற்ற கம்பெனிகள் பல இந்த ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தகுதியில்லாதவை என்றும், பிரதமர் அலுவலகம் அறிவுறுத்திய பல கருத்துக்கள் மீறப்பட்டிருக்கின்றன என்றும் தணிக்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சனையில் குற்றவாளிகளை கண்பிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் இவ்வளவு நாட்கள் கழித்து, இத்தனை சம்பவங்கள் நடந்த பிறகு, எதுவுமே நடக்காதது போல் 2ஜி ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்கு‌‌ரியது. இது விசாரணையை திசை திருப்பி உண்மையை மூடி மறைக்கும் தேசத் துரோக செயலாகும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு எதுவும் இல்லை என்று ஒரு மத்திய அமைச்சர், அதுவும் அதே தொலை‌த்தொடர்புத் துறையைச் சேர்ந்த அமைச்சரான கபில் சிபல் பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பது ஜனநாயக மாண்புகளை, தேசத்தின் உயர்ந்த அமைப்புகளை கேலிக்கூத்தாக்குவதற்கு சமமாகும்.

எனவே, ஊழல் செய்தவர்களை காப்பாற்ற பாடுபடும் கபில் சிபலை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் உடனடியாக நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.