Wednesday, July 27, 2011

சுரண்டையில் தேவர் சிலை அமைக்க சரத்குமார் எம்எல்ஏ நிதி

சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டையில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைக்க தென்காசி எம்எல்ஏ சரத்குமார் ரூ. 1 ல்டசம் நிதியுதவி அளித்துள்ளார்.

சுரண்டை, கீழசுரண்டை, பங்களா சுரண்டை, ஆலடிப்பட்டி ஆகிய பகுதிகளில் சரத்குமார் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம் மனுக்கள் கொடுத்தனர். தொடர்ந்து சுரண்டை தேவர் சமுதாய திருமண மண்டபத்தில் வைத்து முத்துராமலிங்க தேவர் உருவ சிலை அமைக்க சமுதாய நிர்வாகிகளிடம் சரத்குமார் எம்எல்ஏ ரூ.1 லட்சம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொழில் அதிபர் எஸ்வி கணேசன், சமத்துவ மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் கண்ணன், தொகுதி செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், நகர செயலாளர் செந்தூர்பாண்டியன், ஓன்றிய சமக செயலாளர் ராமராஜா, துணை செயலாளர் ராமர், நகர செயலாளர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Monday, July 25, 2011

குற்றாலத்தில் தீம் பார்க் : சரத்குமார் வலியுறுத்தல்

குற்றாலத்தில் தீம் பார்க் : சரத்குமார் வலியுறுத்தல்
குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று துவங்கியது.  இவ்விழாவின் துவக்க விழாவுக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி எம்எல்ஏ சரத்குமார், சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, ஆணையர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நடராஜன் வரவேற்றார்.
அமைச்சர் கோகுலஇந்திரா குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.

விழாவில் சமக தலைவரும் நடிகருமான  சரத்குமார் பேசும்போது,

‘’குற்றாலத்தில் சீசன் உள்ள சில மாதங்கள் மட்டுமே சுற்றுலா பயணிகள் வரும் நிலை உள்ளது.

ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு மேம்படுத்த வேண்டும். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் தீம்பார்க் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
உலகப் புகழ்பெற்ற நயாகரா மற்றும் விக்டோரியா நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசிக்க மட்டும்தான் முடியும். ஆனால், குளித்து மகிழத்தக்க வகையில் உள்ள அருவி குற்றாலம் மட்டும்தான். அனைத்து அணைகளையும் இணைத்து சர்க்யூட் சுற்றுலா செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

Friday, July 15, 2011

தூத்துக்குடியில் சரத்குமார் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி :
தூத்துக்குடியில் சமக.,நிறுவனத் தலைவர் சரத்குமாரின் 58வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை வகித்து பேசினார். முன்னதாக 58 தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.

மாநகரச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் வரவேற்றார். சமத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சுதாகர் நலத்திட்டம் வழங்கி பேசினார். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் பந்து, மட்டையுடன் கூடிய விளையாட்டு உபகரணங்களை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சரத்பாலா வழங்கினார்.

மேலும் ஏழை, எளிய மக்கள் 58 பேருக்கு இலவச வேட்டி, சேலை, குடம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்சன், மாநில செயற்குழு உறுப்பினர் அல்போன்ஸ்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இருதயகுமார், மகளிரணி செயலாளர் முத்துமதி, மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்களான மாவை சக்திவேல், தாளமுத்து, ஒன்றிய செயலாளர் ஜெகன், ஸ்ரீவைகுண்ட ஒன்றிய செயலாளர் ராஜன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ராஜபாண்டியன், ஒன்றிய வர்த்தக அணி துணை செயலாளர் திவான் ராஜசேகர், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா மற்றும் கட்சித் தொண்டர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சரத்ஜெகன் நன்றி கூறினார்.

காமராஜர் 109வது பிறந்த நாள் சரத்குமார் மரியாதை

காமராஜரின் 109வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, நேற்று அவரது சிலைகள் மற்றும் படத்துக்கு மலர் தூவி பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர் ஜெயபிரகாஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் சேவியர் மற்றும் நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Thursday, July 14, 2011

கல்வி "கதாநாயகன்' : இன்று காமராஜரின் 109 வது பிறந்தநாள்

தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.
இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.

கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன்.

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .
பஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.

யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.

காமராஜ் இருந்தால் "காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்.

பிறந்த நாளை சரத்குமார் எளிமையான முறையில் கொண்டாடினார்

தனது பிறந்த நாளை சரத்குமார் எளிமையான முறையில் கொண்டாடினார். ஈழத் தமிழர்களுக்காக இனி தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்த அவர், தனது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் என்றார்
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார். என்னுடைய பிறந்த நாளை இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறேன். இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும், மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமான உதவிகளையும் ஏழை எளியோருக்கு நல உதவிகளும் கட்சி நிர்வாகிகள் மூலம் இன்று வழங்கப்படுகிறது.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மிகுந்த வருத்தத்தை தருகிறது. ஏற்கனவே கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இப்போது நடந்துள்ள குண்டுவெடிப்பு நமக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதற்கு மத்திய உளவுத்துறை செயல்படாததே காரணமாகும். உளவுத்துறையை பலப்படுத்தி இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தக்க பாதுகாப்பு நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் போர்க்குற்றம் இழைத்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசினை சேர்த்துக்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றினார். இந்தியாவுக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. மேலும் தெற்கிலும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதும், இலங்கை அரசால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை துணிச்சலான நடவடிக்கை. இது மிகவும் பாராட்டத்தக்கது. இதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய திருநாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக ஆகின்றார் என்றார் சரத்குமார்

Wednesday, July 13, 2011

ச.ம.கட்சி நிர்வாகிகள் மாற்றம்

சென்னை,  ஜூலை 13:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் 10 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர்
சரத்குமார் எம்எல்ஏ நியமித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
.
வட சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகிக்கும் எம்.ஏ.சேவியர் அப்பொறுப்போடு கூடுதல் பொறுப்பாக மாநில இளைஞரணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் வழக்கறிஞர் ஆர்.அய்யாவு மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஏ.பிரான்சிஸ் அந்தோணிராஜ் ஆகிய இருவரும் மாநில இளைஞரணி துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளராக பதவி வகித்த பி.குமார் மாநில வழக்கறிஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர மாவட்ட செயலாளர் ஜி.ஈஸ்வரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரை மண்டல அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் டி.பிரபாகரன் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளராகவும், வீர.ராஜ்குமார் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராகவும், எஸ்.சுதாகர் மத்தியசென்னை மாவட்ட செயலாளராகவும், கே.தமிழ்சாமி திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், அப்துல் பாசித் ராமநாதபுரம் மத்திய மாவட்ட செயலாளராகவும், சி.எம்.சின்னசாமி பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் எஸ்.சிவா திருப்பூர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராகவும், முருகன் விருதுநகர் நகரச் செயலாளராகவும், எஸ்.விஜயன் ஆலங்குளம் (வடக்கு) ஒன்றிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.எம். தர்மராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ஈரோடு மாநகர் (ஆட்டோ ஓட்டுநர் பிரிவு) தொழிற்சங்க செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் நிலையை கருத்தில் கொண்டு பிறந்த நாளைக் கொண்டாடவில்லை- சரத்

சென்னை: ஈழத்தில் நிலவி வரும் அவல நிலையைக் கருத்தில் கொண்டு எனது பிறந்த நாளையொட்டி எந்தவித கொண்டாட்டத்திற்கும் நான் ஏற்பாடு செய்யவில்லை. எனது ரசிகர்களும், சமத்துவ மக்கள் கட்சியினரும் ஏழை எளியோருக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகரும், தென்காசி எம்.எல்.ஏவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் நிலை குறித்து நிரந்தர துயரம் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஈழத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் இன்றயை நிலை உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் ஏற்படக்கூடாத ஒன்று.

இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழர்களின் நலன் காக்க இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன என்பது இதுவரை முழுமையாக தெரியவில்லை. போரில் கடுமையான பாதிப்புக்குள்ளான தமிழர் பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் நடக்கிறதா, நடக்கவில்லையா என்ற விபரம் தெரியவில்லை.

ஒரு தமிழன் கூட இடம் பெறாத அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அவ்வப்போது கண்துடைப்பிற்காக இலங்கைக்கு அனுப்பி வருகிறது. அதனால் எந்த ஒரு நிலையான பயனும் ஏற்படவில்லை. மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை உருவாக்கும் விதமாக, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு இலங்கை நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கையில் ஹம்பன் தோட்டா என்ற இடத்தில் , சீனா துறைமுகம் அமைக்க இலங்கை அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவையும், சீனாவின் உபகோயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இலங்கை அனுமதிக்கக்கூடும்.இத்தகைய சூழலில் கச்சத்தீவை நாம் மீட்டே ஆக வேண்டும். தமிழக முதல்வர் கச்சத்தீவை மீட்க மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்கிட வேண்டும்.

இந்தச் சூழ்நிலைகளால் என்னுடைய பிறந்ததினமான நாளை (14.07.2011) எந்தவொரு விரிவான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. வழக்கமாக என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வரும் தோழர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் ஆங்காங்கே உள்ள ஏழை, எளியோருக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து, எளியமுறையில் கொண்டாட வேண்டும். எனது இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்துச் சொல்வதை தவிர்க்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எங்கிருந்து வாழ்த்தினாலும் நேரில் வாழ்த்து பெற்றதாக மகிழ்ச்சியடைவேன் என்று அவர் கூறியுள்ளார்.

Wednesday, July 6, 2011

மக்கள் குறை தீர்க்க களம் இறங்கினார் சரத்-அதிகாரிகளை அழைத்து அறிவுரை

தென்காசி: புதன்கிழமை, ஜூலை 6, 2011
தென்காசி எம்எல்ஏ சரத்குமார் தனது அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அதிகாரிகளை அழைத்து மக்களின் குறைகளைத் தீர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தென்காசி தொகுதி எம்எல்ஏ சரத்குமார் தென்காசியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் திரளானோர் சென்று சரத்குமாரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

திருமண உதவி தொகை, முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களையும், சாலை வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறிந்த மனுக்களையும் பொதுமக்களிடம் இருந்து சரத்குமார் பெற்றுக் கொண்டார்.

இந்த மனுக்களை பரீசிலனை செய்த சரத்குமார் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

மேலும் அரசி்ன் அனைத்து துறை அதிகாரிகளையும் எம்எல்ஏ அழைத்து தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள், நடக்க இருக்கும் வளர்ச்சி பணிகள், தேவைப்படும வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரையாடல் செய்தார்.

Monday, July 4, 2011

நெல்லையில் அரசு பொருட்காட்சி-சரத்குமார் எம்எல்ஏ கலந்து கொள்கின்றனர்

திருநெல்வேலி : நெல்லையில் அரசு பொருட்காட்சி இன்று (3ம் தேதி) ஆரம்பமாகிறது. துவக்க விழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நெல்லை டவுன் மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி இன்று (3ம் தேதி) ஆரம்பமாகிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில் பொருட்காட்சியை அமைச்சர் செந்தமிழன் துவக்கி வைத்து தலைமை வகிக்கிறார். கலெக்டர் நடராஜன் வரவேற்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ராசாராம் விளக்கவுரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் கருப்பசாமி, சுப்பையா முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் சரத்குமார் எம்எல்ஏ உட்பட எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். பி.ஆர்.ஓ இளங்கோ நன்றி கூறுகிறார்.
இப்பொருட்காட்சி மொத்தம் 45 நாட்கள் நடக்கிறது. இதில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் 27 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.